தஞ்சை மாவட்டத்தில் அமைந்திருக்கும் தஞ்சாவூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலை வல்லம் மேம்பாலத்தில் கடந்த ஜூன் 25ஆம் தேதி காயிதே மில்லத் நகரைச் சேர்ந்த யூசுப் என்பவர் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது வழிமறித்த மர்ம நபர்கள் அவரை சரமாரியாக வெட்டிக் கொலை செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். அந்த விசாரணையில் சிசிடிவி கேமரா காட்சிகளின் அடிப்படையில் திருச்சியைச் சேர்ந்த சகாதேவன்(26), மற்றும் பிரகாஷ்(24) ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியானது. படு கொலை செய்யப்பட்ட யூசுப்பின் மனைவி அசீலா (வயது 37) என்பவரே கூலிப்படையினரை வைத்து அவரை கொலை செய்திருப்பதும், மேலும் 4 பேருக்கு இந்த கொலையில் தொடர்பு இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டன.
இதையடுத்து போலீசார் சகாதேவன்(26), பிரகாஷ்(24) மற்றும் அசீலா(37) மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.. மேலும் தலைமறைவாக இருந்த கேசவன் (28), சந்துரு(21) , ஆறுமுகம் (21) மற்றும் பித்துக்குளி கார்த்திக் (26) ஆகியோர் நேற்று போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.. அவர்களிடமிருந்து கொலைக்கு பயன்படுத்தப்பட்ட பட்டாக் கத்திகள், பைக் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.