சென்னையில் வாடகைக்கு இருக்கும் நபர்களின் விபரங்களை வீட்டு உரிமையாளர்கள் காவல்நிலையத்தில் அளிக்க வேண்டுமென காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகரில் வாடகை வீட்டில் இருக்கும் வாடகைதாரர்கள் விபரங்களை வீட்டு உரிமையாளர்கள் இன்னும் 60 நாட்களுக்குள் வீட்டின் எல்லைக்குட்பட்ட காவல் நிலையத்தில் கொண்டுபோய் அளிக்க வேண்டும் என சென்னை மாநகர காவல் துறை உத்தரவிட்டு உள்ளது. இந்த இந்த உத்தரவிற்கு செவிசாய்க்காமல் இருந்தால் வீட்டு உரிமையாளர்களுக்கு 6 மாத சிறை தண்டனையும், ரூபாய் ஆயிரம் அபராதமும் தண்டனையாக விதிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
அதேபோல் வாடகைக்கு இருக்கும் நபர்களும் தங்களது விவரங்களை உரிமையாளர்களிடம் அளித்து உரிய ஒத்துழைப்பு தரவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கான காரணமாக காவல்துறை சார்பில் கூறப்படுவது என்னவெனில், சென்னையில் சமூக விரோத செயல்களில் ஈடுபடக்கூடிய சிலர் பிற மாவட்டங்களை, மாநிலங்களை சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள்.
அவர்கள் சென்னையில் தனியாக வீடு வாடகை எடுத்து தங்கி வருகிறார்கள். சமீபத்தில் வங்கி, வணிக வளாகம் உள்ளிட்ட பல பகுதிகளில் குற்ற சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாகவும் அவர்கள் யாரும் சென்னையை சேர்ந்தவர்கள் கிடையாது என்பது திட்டவட்டமாக தெரிய வந்துள்ளது. சென்னையில் குற்ற சம்பவங்களை குறைப்பதற்காக இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட இருப்பதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.