கொரோனா அதிகம் பரவும் நகரத்தில் உலக அளவில் 2 வது இடத்தை சென்னை பிடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சீனாவின் ஹூகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலக அளவில் 190 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மிகப்பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. மிகப்பெரிய வல்லரசு நாடுகளிலும் இந்த வைரஸ் கோர தாண்டவம் ஆடி வரும் சூழ்நிலையில், இந்தியாவிலும் இதனுடைய பாதிப்பு அதிகமாகவே இருக்கிறது. சமீபகாலமாக டெல்லி, மகாராஷ்டிரா, சென்னை இந்த மூன்று பகுதிகளிலும் பாதிப்பு மிக அதிகமாக பரவி வருகிறது.
இந்த மூன்று மாநிலங்களும் பாதிப்பில் போட்டி போடுவது போல் காணப்பட்டது. சமீபத்தில் இந்த இரண்டு மாநிலங்களை காட்டிலும் சென்னையில் பாதிப்பு அதிகமாக பரவி வருவதாக தகவல்கள் வெளியாகிய நிலையில், உலக அளவில் பாதிப்பு அதிகம் பரவும் நகரங்களில் சென்னை இரண்டாவது இடத்தை பிடித்துள்ளதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இதன்படி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரம் கொரோனா பாதிப்பு அதிகம் பரவுவதில் முதல் இடத்திலும், இரண்டாவது இடத்தில் சென்னை மாநகரம் இடம் பெற்று இருப்பதும் தெரியவந்து உள்ளது.
கடந்த ஜூன் 30-ஆம் தேதி முதல் கணக்கிடுகையில் இந்தியாவிலேயே கொரோனா பாதிப்பு தற்போது அதிகம் பரவும் நகரமாக சென்னை மாறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே பாதிப்பின் தீவிரத்தை மக்கள் உணர்ந்து மிகவும் எச்சரிக்கையுடனும் கவனமாகவும் இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.