சேலம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
சேலத்தில் கொரோனா தொற்றின் பாதிப்பானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி 1034 நபர்கள் கொரோனவால் பாதிக்கப்பட்டிருந்தனர். காவல் ஆய்வாளர் மற்றும் காவல் உதவி ஆய்வாளர் உட்பட 88 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. நேற்று நள்ளிரவு மற்றும் இன்று காலை என 2 நபர்கள் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.
சேலம் அழகாபுரம் சின்ன புதூர் பகுதியைச் சேர்ந்த 58 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கொரோனா பாதிக்கப்பட்டு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று நள்ளிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு கல்லீரல் பாதிப்பு இருந்து வந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
அதேபோல் கொரோனா சிகிச்சை பெற்றுவந்த ஆத்தூர் பகுதியை சேர்ந்த 57 வயது மதிக்க தக்க பெண் ஒருவர் இன்று காலை அரசு மருத்துமனையில் உயிரிழந்துள்ளார். அவர் சிறுநீரக செயலிழப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்ததாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சேலம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஏற்கனவே 3 பெண்கள் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது கூடுதலாக 2 நபர்கள் உயிரிழந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.