தமிழகத்தில் கொரோனா தொற்று குறித்த விவரங்களை தெரிவித்த அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசும் போது, மாண்புமிகு முதலமைச்சர் தலைமையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு தொடர்ந்து போராடி, நல்ல முறையில் நாம் பாதுகாப்பு நடைமுறைகளை செய்து கொண்டிருக்கிறோம். இதுவரை 56,021 பாசிட்டிவ் நபர்களை நெகடிவ் கேசசாக மாற்றி அவர்களின் உயிர் காக்கப்பட்டு, நல்ல முறையில் வீட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். இதுவரை 98,392 நபர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியபட்டிருந்தாலும் கூட குணமடைந்தோர்கள் போக இப்பொழுது சிகிச்சையில் 42,371 நபர்கள் உள்ளனர். சிகிச்சை பெற்று வருபவர்கள் மருத்துவமனையாக இருக்கட்டும், ஹெல்த் சென்டர், வீட்டு கண்காணிப்பாக இருந்தாலும் அவர்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் அரசு செயல்பட்டு வருகின்றது.
உலகையே அச்சுறுத்திவரும் இந்த கொரோனாவிற்கு பிரத்யோகமாக தடுப்பு மருந்து இல்லாத நிலையில் அம்மாவின் அரசு 56,021 நபர்களை பாதுகாத்து மீட்டுள்ளது என்பதை இந்த நேரத்தில் நான் பெருமையுடன்கூறிக்கொள்கிறேன். அரசு அறிகுறியுடன் கூடிய நபர்களையும், அறிகுறி இல்லாத நபர்களையும் கனிவுடன் கவனித்து எல்லா உதவிகளையும் செய்து வருகிறது.அறிகுறி இல்லாதவர்களை கூட நாம் கண்டறிந்து அவர்களை தனிமை படுத்தி அவர்களிடம் இருந்து மற்றவர்களுக்கு தொற்று பரவாமல் கட்டுப்படுத்தக்கூடிய பணிகளை அரசு துரிதமாக செயல்படுத்திவருகிறது.
கொரோனா அறிகுறி என்று சொல்லக்கூடிய சளி ,இருமல்,காய்ச்சல்,உடம்பு வலி அல்லது அவர்களுக்கு நுகர்வதில் சிரமம்,மூச்சுத்திணறல் இருந்தால் அவர்களை உடனடியாக அரசு கண்டறிந்து மருத்துவமனைகளில் சேர்த்து அவர்களுக்கு தேவையான மருந்துகள் வழங்கப்பட்டு கவனிக்கப்படுகிறார்கள். மேலும் இதில் சவாலான விஷயமாக, கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ள வயதிலேயே மூத்தவர்கள், கேன்சர், டயாபெடிஸ், ஹைப்பர்டென்ஷன், இதயக்கோளாறுகள், ஆஸ்துமா போன்ற பிற வியாகிகளுடன் தொடர்புள்ள நபர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்படும் போது அது மருத்துவர்களுக்கு ஒரு மிக பெரிய சவாலாகவே இருந்தாலும் அதையும் போராடி மருத்துவர்கள் சிறப்பாக பணியாற்றி உயிர்களை காப்பாற்றி வருகின்றனர் என்பதையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்.
இதில் சிறப்பம்சமாக தமிழ்நாடு முழுவதும் 75,000 படுக்கை வசதிகளை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அனைத்து மாவட்ட ஆட்சித்தலைவர்களின் தலைமையில் உருவாக்கியுள்ளனர். சென்னையில் மட்டும் 17,000 படுக்கை வசதிகளை மிக சிறப்பாக உருவாக்கியுள்ளார்கள்.சென்னை மருத்துவ கல்லூரிகளில் 5000க்கு மேலான படுக்கை வசதிகளை செய்து பாதுகாத்து வருகின்றோம்.இதனோடு இணைத்து ஆக்ஸிஜன் கருவிகளையும் அதிகப்படுத்தியுள்ளது. கிண்டியில் செயலாற்றி வரும் இருதய மையமான மருத்துவமனையில் 715 படுக்கை வசதிகளை உள்ளடக்கிய நவீன உபகரணங்களுடன் கூடிய அறைகளை உருவாக்கி மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஓரிரு நாட்களில் திறந்து வைக்க இருக்கின்றார்.