நேற்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை அதிகமாவதற்கு காரணம் தமிழகம் முழுவதும் அதிகமாக பரிசோதனைகள் செய்யப்பட்டு இரவு பகல் பாராமல் ஒரு நாளைக்கு 32 ஆயிரம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது. இதனால் ஆரம்ப நிலையில் இருக்கும் நபர்களை எளிதாக கண்டறிந்து அவர்கள் மூலம் மற்றவர்களுக்கு பரவாமல் பாதுகாக்க முடிகிறது. மேலும் தமிழ்நாடு பெரிய மருத்துவமனைகள் மட்டுமல்லாமல் சிறு மருத்துவமனைகள் கூட உயிர்காக்கும் மருந்துகள் கொடுக்கப்பட்டு பாதுகாத்து வருகிறது. எனவே மக்களுக்கு பதட்டம்,பயம் இவை எதுவும் வேண்டாம் மிகுந்த கவனத்துடனும் எச்சரிக்கையுடனும் மக்கள் இருக்க வேண்டும்.
கண்ணுக்கு தெரியாத இந்த உயிர்கொல்லி வைரஸ் தாக்கம் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என தெரிந்தும் மருத்துவர்கள் செவிலியர்கள் நாளுக்கு நாள் இரவு பகல் பாராமல் உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். எனவே மக்கள் அரசாங்க விதிமுறைகளை மதித்து சமூக இடைவெளியுடன் முகக்கவசம் அணிந்து வெளியில் செல்லும்போது சமூக இடைவெளியை பின்பற்றி கவனத்துடன் இருக்க வேண்டும்.பொதுமக்களின் ஒத்துழைப்பு இருந்தாலே நாம் கண்டிப்பாக மீண்டு வருவோம் என்பது உறுதியானது.
துறைமுகத்தில் வேலை செய்யும் நபர்களை ஆய்வு செய்து அவர்களுக்கு தேவையான பாதுகாப்பு வசதிகள் மருத்துவ வசதிகள் இவற்றை பெறும் வகையில் அவர்களை பரிசோதித்து மருத்துவமனைகளில் அனுமதித்து சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. நேற்று மட்டும் தாம்பரத்தில் 500 படுக்கை வசதிகள் ஏற்படுத்தி ஆய்வுகளை மேற்கொண்டு வந்தோம். மேலும் முதலமைச்சர் தமிழகத்திலேயே 750 படுக்கை வசதிகளை கொண்ட நவீன கருவிகளை கொண்டு வடிவமைக்கப்பட்ட மருத்துவமனைகளை ஏற்படுத்தி அவற்றை ஆய்வு செய்தார். இப்பொழுது ஊரடங்கு என்பது நமக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது என்பது அனைவரும் அறிந்தது.
இதைத்தொடர்ந்து களப்பணியாளர்கள் வீட்டிற்கு நேரடியாக சென்று இருமல், சளி, காய்ச்சல், நுகர்வதில் சிரமம், உடல் சோர்வு உள்ளதா என்று தினமும் கேட்டு அவர்களுக்கான கேம்ப் போன்றவற்றை நிகழ்த்தி சிறப்பாக செயல்படுத்தி வருகின்றனர். இதற்கெல்லாம் காரணம் நாம் ஊரடங்கில் இருப்பதே. அதனால்தான் நிறைய பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு கொரோனா தொற்று உள்ள நபர்களை மருத்துவமனைகளில் அனுமதித்து அவர்களுக்கான சிகிச்சைகளை எடுத்து வர உதவியாக உள்ளது.
கொரோனா வைரஸிற்கு ஆண், பெண், தலைவர், தொழிலாளர் என்று பாகுபாடு தெரியாது எனவே அனைவருமே பாதுகாப்பாக இருப்பது நல்லது. இதற்கிடையில் திமுக தலைவர்கள் அனைத்திந்திய அண்ணா திராவிட தலைவர்கள் அவர்களையும் சந்தித்து அவர்கள் உடல் நலத்தில் அக்கறை காட்டி வருகிறோம். என்னுடைய கருத்து என்னவென்றால் பதட்டம் வேண்டாம், பயம் வேண்டாம் உங்களைப் பாதுகாக்க மருத்துவர்கள், செவிலியர்கள் தயார் நிலையில் உள்ளனர். கொரோனா வைரஸை கொண்டு அச்சம் வேண்டாம். வைரஸால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்தவர்கள் தங்களது நேர்மறையான எண்ணங்களால் மட்டுமே குணமடைய முடிந்தது. பொது மக்களாகிய நாம் நேர்மறை எண்ணங்களுடன் எந்த ஒரு பயம் இல்லாமல் பாதுகாப்புடன் அரசு விதித்த விதிமுறைகளை மதித்து பின்பற்ற வேண்டும். மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு மருத்துவமனை வாயிலாக ஸ்பீக்கர் பயன்படுத்தி அவர்களுடன் பேசி அறிவுரை மற்றும் மனநல ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.