தன்னை கோலியுடன் ஒப்பிடாமல் அதற்கு மாறாக பாகிஸ்தான் ஜாம்பவான்களான ஜாவித் மியான்தாத் போன்றோருடன் ஒப்பிட்டால் நன்றாக உணர்வேன் என பாபர் அசாம் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானின் விராட் கோலி என ரசிகர்கள் செல்லமாக அழைத்து வரும் பாபர் அசாம் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஒரு சிறந்த பேட்ஸ்மேனாக உள்ளார். இவரை அந்நாட்டு ரசிகர்கள் விராட் கோலிக்கு இணையான வீரராக கட்டமைத்து உள்ளனர். இது குறித்து பேசிய பாபர் அசாம், “கோலியுடன் என்னை ஒப்பிடுவதில் எனக்கு விருப்பமில்லை. அதற்கு பதிலாக ரசிகர்கள் பாகிஸ்தான் ஜாம்பவான்களான ஜாவித் மியான்தாத், முகமது யூசுப், யூனிஸ் கான், இன்சமாம்-உல்-ஹக் ஆகியோருடன் என்னை ஒப்பிட்டால் மகிழ்ச்சியாக இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.
மூன்று வகையான போட்டிகளிலும் கோலி பேட்டிங்கில் 50 ரன்களுக்கு மேல் ஆவரேஜ் வைத்துள்ளார். இதே போல் பாபர் அசாம் ஒருநாள், டி20 போட்டிகளில் 50க்கும் மேல் ஆவ்ரேஜும், டெஸ்ட் போட்டிகளில் 45 ரன்கள் ஆவரேஜூம் வைத்துள்ளார்.மேலும் இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் சென்றுள்ள பாகிஸ்தான் அணி இந்த மாத இறுதியில் மூன்று போட்டிகள் அடங்கிய டி20, டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் பங்கேற்பது பற்றி பேசிய அவர், ”பொதுவாக டெஸ்ட் போட்டியில் நீங்கள் சதம் விளாசினால், அதனை இரட்டைச் சதம் அல்லது முச்சதமாக மாற்ற வேண்டும் என நினைப்பீர்கள். அதைத்தான் நானும் இந்தத் தொடரில் செய்ய விரும்புகிறேன். இந்தத் தொடரில் எனது இயல்பான ஆட்டத்தை நான் வெளிப்படுத்துவேன். ஆனால் எனது ஷாட்களின் தேர்வு பந்து வீச்சாளர்கள், மைதானத்தின் தட்பவெப்ப சூழ்நிலை ஆகியவற்றைப் பொருத்து மாறும்.கடந்த முறை இங்கிலாந்து சுற்றுப் பயணம் மேற்கொண்டபோது நாங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினோம். இம்முறையும் அதே போன்று ஆட்டத்தை வெளிப்படுத்த நாங்கள் ஆர்வமாக இருக்கிறோம். இந்த சுற்றுப் பயணத்தின் எங்களது முதல் குறிக்கோள் இந்தத் தொடரை வெல்வது தான். அதில் தான் தற்போது நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம்”, எனவும் தெரிவித்தார்.