இங்கிலாந்துக்கு குறிப்பிட்ட நாடுகளிலிருந்து வந்தால் இரண்டு வார தனிமை கிடையாது என அந்நாட்டு போக்குவரத்து துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சீனாவின் ஹுகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலக அளவில் மிகப்பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தியது. இதனால் பெரிய அளவில் பாதிக்கப்பட்ட பல நாடுகள் தற்போது கொரோனாவை கட்டுப்படுத்தி மீண்டெழ தொடங்கியுள்ளன. சில நாடுகள் பயணங்களை மேற்கொள்ளவும் தொடங்கிவிட்டன. அந்த வரிசையில் இங்கிலாந்து நாட்டில், பிற நாடுகளிலிருந்து இங்கிலாந்துக்கு தங்கள் நாட்டு மக்களும் , முக்கிய காரணங்களுக்காக பிற நாட்டு மக்களும் பயணம் மேற்கொண்டு வரலாம் என தெரிவித்துள்ளது.
இந்நிலையில் குறிப்பிட்ட சில நாடுகளில் இருந்து மட்டும் இங்கிலாந்து நாட்டிற்குள் வரும் மக்களுக்கு இரண்டு வார கால கட்டாய தனிமை கிடையாது என அந்நாட்டின் போக்குவரத்து துறை அமைச்சர் கிராண்ட் ஷாப்ஸ் தெரிவித்துள்ளார். இந்த முடிவானது அந்நாட்டின் சுகாதார துறை அதிகாரிகளோடு ஆலோசித்த பின்பே எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அப்படி இங்கிலாந்து வைத்திருக்கக்கூடிய குறிப்பிட்ட நாடுகளின் பட்டியலில், ஜெர்மன், பிரான்ஸ், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேற்கண்ட நாடுகள் அனைத்தும் சில மாதங்களுக்கு முன்பு வரை கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது அந்த நாடுகள் கொரோனாவிடமிருந்து தப்பி மீண்டு எழ தொடங்கியது உலக நாட்டு மக்களிடையே ஒரு விதமான நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.