சீனா போர் பயிற்சி செய்யும் கடற்பரப்பில் அமெரிக்கப் போர் கப்பல்களும் பயிற்சி மேற்கொள்ள இருப்பது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது
சீனா தென்சீனக் கடற்பரப்பில் தொடர்ந்து தனது ஆதிக்கம் செலுத்தும் முயற்சியை செய்து வருவது அந்த கடல் பரப்பில் அமைந்திருக்கும் அண்டை நாடுகளான வியட்நாம், பிலிப்பைன்ஸ், தைவான், ஜப்பான் போன்ற நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்து வருகின்றது. சர்வதேச கடல் பகுதியான தென்சீன கடற்பரப்பில் அமைந்திருக்கும் தீவுகள் மற்றும் அதனை சுற்றி இருக்கும் பகுதிகளில் சீனா போர் பயிற்சிகள் ஈடுபட்டு வருகின்றது. இச்செயல் அண்டை நாடுகளுக்கு பதற்றத்தை ஏற்படுத்த சீனாவிற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவும் அதன் அதிருப்தியை தெரிவித்துள்ளது. இந்நிலையில் அமெரிக்கா 2 விமானம் தாங்கி போர்க் கப்பல்களை சீனா போர் பயிற்சி மேற்கொண்டு வரும் இடத்திற்கு அனுப்பி உள்ளது. மேலும் 2 போர்க் கப்பல்களும் சீனா பயிற்சி செய்யும் கடற்பரப்பில் போர் பயிற்சி செய்ய இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அது குறிப்பாக எந்த இடம் என்பது பற்றிய தகவல்கள் வெளியாகவில்லை. இரண்டு நாடுகளும் ஒரே இடத்தில் போர் பயிற்சியை மேற்கொண்டால் போர் வருவதற்கான சூழல் ஏற்படும் என வல்லுநர்கள் கருதுகின்றனர்.
அமெரிக்காவின் போர்க் கப்பல் அட்மிரல் ஜார்ஜ் கூறுகையில் பிராந்திய பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையை உறுதிப்படுத்த அமெரிக்கா உறுதியுடன் இருக்கின்றது என்பதை எங்களின் கூட்டணி நாடுகளுக்கு உணர்த்தும் விதமாகவும் அவர்களுக்காக துணைநிற்கும் விதமாகவும் இந்தப் போர் பயிற்சி மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்துள்ளார். 1500 கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட கடற்பரப்பில் சீனா தனக்கு 90% பகுதியை சொந்தமென உரிமை கொண்டாடி வருகின்றது. சர்வதேச கடல் பகுதியை தனக்கு சொந்தம் என சீனா உரிமை கோருவதற்கு உலக நாடுகள் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். சீனா மற்றும் அமெரிக்கா ஒரே கடற்பரப்பில் போர் பயிற்சியை செய்ய இருப்பது அங்கு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.