கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் மிக விரைவில் இந்தியா உலகளவில் மூன்றாவது இடத்தை பிடித்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சீனாவின் ஹூகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனவைரஸ் இன்று உலக அளவில் மிகப் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனுடைய பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வர இதற்கான தடுப்பூசியை கண்டுபிடிக்கும் பணியில் உலகநாடுகள் ஒருபுறம் மும்முரம் காட்டி வருகின்றனர். பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலும் நாள்தோறும் அப்டேட் செய்யப்பட்டு வருகிறது.
அந்தவகையில், கடந்த மாதம் கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா ஐந்தாவது இடத்தில் இருந்து நான்காவது இடத்திற்கு சென்றது.இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை 24 ஆயிரத்து 850 ஆக கணக்கிடப்பட்டுள்ளது. இதன்படி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6 லட்சத்து 73 ஆயிரத்து 904ஆக உயர்ந்துள்ளது. இந்த பாதிப்பு எண்ணிக்கையை கணக்கிடுகையில், விரைவில் இந்தியா நான்காவது இடத்தில் இருந்து மூன்றாவது இடத்திற்கு சென்று விடும் என தெரிகிறது.
ஏனென்றால் மூன்றாவது இடத்தில் இருக்கக்கூடிய ரஷ்யாவில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 674,515 ஆகும். இந்தியாவின் மொத்த பாதிப்பு எண்ணிக்கைக்கும் ரஷ்யாவின் மொத்த பாதிப்பு எண்ணிக்கைக்கும் சில வித்தியாசம் மட்டுமே இருக்கிறது. எனவே இந்திய மக்கள் கூடுதல் கவனம் எடுத்து எச்சரிக்கையுடன் தங்களையும் தங்களது குடும்ப உறுப்பினர்களையும் பாதுகாத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.