மக்கள் நீதி மய்யம் சார்பாக உருவாக்கப்பட்ட நாமே தீர்வு என்று இயக்கத்திற்கு புதிய இணையதளத்தை ஜிவி பிரகாஷ் அறிமுகம் செய்துள்ளார்.
மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக உருவாக்கப்பட்ட புதிய இயக்கத்திற்கு தனியாக இணையதளம் வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் துணைத் தலைவர் ஆர். மகேந்திரன் கூறுகையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரான கமலஹாசன், மக்களின் பிரச்சனைகளுக்கு மக்களே உதவிடும் வகையில் “நாமே தீர்வு” என்று புதிய இயக்கத்தை உருவாக்கினார். இந்த இயக்கத்தில் இதுவரை 5,700 க்கு மேற்பட்ட தன்னார்வலர்கள் மக்களுக்கு உதவிட இணைந்துள்ளனர்.
மேலும் 54,000திற்கும் அதிகமாக உதவிகள் கேட்டு அழைப்புகள் வந்துள்ளன. இந்த இயக்கத்தின் அடுத்தகட்டமாக http://www.naametheervu.org எனும் தனி இணையதளத்தை இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி பிரகாஷ் அறிமுகம் செய்துள்ளார். கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களை விட ஊரடங்கினால் பாதிக்கப்படுபவர்கள் அதிகம், என்ற நிலையில் உதவும் எண்ணம் கொண்டவர்களுக்கு ஏற்ப எளிமையான வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த இணையதளத்தில் தன்னார்வலர்களின் எண்ணிக்கை மற்றும் எத்தனை பேர் இதனால் பயன் அடைந்துள்ளனர் என்பது போன்ற விவரங்களை நேரடியாக பகிரப்படும். எனவே உதவியவர்கள் தங்களின் உதவி எத்தனை மக்களுக்கு சென்றடைந்துள்ளது என்பதையும் எத்தனை மக்களுக்கு உதவி தேவைப்படுகிறது என்பதையும் நேரடியாக அறிய முடியும் என தெரிவித்துள்ளார்.