சர்வதேச விதிமுறைப்படி கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனை மேற்கொள்ளப்படும் என ஐசிஎம்ஆர் விளக்கமளித்துள்ளது.
ஹைதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் தயாரித்து வரும் கொரோனா தடுப்பு மருந்தை மனிதர்களிடத்தில் பரிசோதனை செய்ய ஐசிஎம்ஆர் பரிந்துரை செய்துள்ளது. முதற்கட்ட சோதனையாக விலங்குகளுக்கு செலுத்தப்பட்டதில் வெற்றி கிடைத்ததால் அடுத்தக்கட்ட சோதனைக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இதனிடையே இந்திய மருந்து கட்டுப்பாட்டு தலைமையகமும் இந்த பரிசோதனைக்கு அனுமதி அளித்துள்ளது. நாளை முதல் சோதனை முயற்சியாக கொரோனா தடுப்பு மருந்து பரிசித்திக்க உள்ளதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.
இந்த சோதனை முயற்சி வெற்றியடைந்தால் ஆகஸ்ட் 15 முதல் சிகிச்சைக்கு பயன்படும் என தெரிவிக்கப்படுகிறது.
இதற்காக இந்திய அளவில் சென்னை, விசாகப்பட்டினம், டெல்லி, பாட்னா உள்ளிட்ட 12 மருத்துவமனைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. பரிசோதனைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனையை தொடங்குவதற்கு அனைத்து ஒப்புதல்களையும் விரைவாக பெற்று தயார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆனாலும் இந்த சோதனைக்கு அனுமதி அளித்ததற்கு ஆராய்ச்சியாளர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் சர்வதேச விதிமுறைகளுக்கு உட்பட்டே தடுப்பு மருந்து பரிசோதனை மேற்கொள்ள இருப்பதாக ஐசிஎம்ஆர் விளக்கம் அளித்துள்ளது. மனிதர்களின் பாதுகாப்பே முக்கியம் என்றும், அதில் எந்த சமரசம் கிடையாது என்றும் ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.