Categories
உலக செய்திகள்

தலைவரின் உடலை திருப்பி கொடுங்க… ராணுவ வீரர்கள் உட்பட 6 பேரை கடத்தி சென்று மிரட்டிய பழங்குடியினர்..!!

ஈக்வடார் நாட்டில் கொரோனாவால் உயிரிழந்த தங்கள் தலைவரின் உடலை திரும்பித்தரக் கோரி ராணுவ வீரர்கள் உட்பட 6 பேரை அமேசான் பழங்குடியின மக்கள் கடத்திச்சென்ற பின், புதைத்த உடல் தோண்டி எடுக்கப்பட்டு அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்று ஈக்வடார் (Ecuador). இந்த நாடு, பெரு, பிரேசில் நாடுகள் அருகில் அமைந்துள்ளது. உலகிலேயே மிகப்பெரிய மழைக்காடுகளான அமேசான் இந்தநாட்டை சுற்றி தான் அமைந்துள்ளது. இந்த காடுகளின் பகுதிகளில் பல்வேறு கலாச்சாரத்தை கொண்ட அமேசான் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர்.

இதற்கிடையே உலகையே ஆட்டிப்படைத்து வரும் கொரோனா அமேசான் பகுதிகளிலும் தற்போது வேகமெடுத்து வருகிறது. இந்தநிலையில் ஈக்வடார் நாட்டின் குமே என்ற பகுதியில் வசித்து வரும் அமேசான் பழங்குடியின மக்களின் தலைவர் கொரோனாவால் பலியானார்.. இதையடுத்து இறந்த தலைவரின் உடலை தங்கள் வசம் ஒப்படைக்க வேண்டும் என அப்பகுதியில் வசித்து வந்த அமேசான் பழங்குடியினர் கோரிக்கை விடுத்தனர். ஆனால் சுகாதாரத்துறை அதிகாரிகள் அந்த நபரின் உடலை, குடும்பத்தினரிடம் அளிக்காமல், கொரோனாவால் பலியானோரை அடக்கம் செய்யும் நடைமுறைப்படியே அடக்கம் செய்தனர்.

இதனால் கடும் கோபமடைந்த அப்பகுதியை சேர்ந்த பழங்குடியின மக்கள் ஈக்வடார் நாட்டை சேர்ந்த 2 ராணுவ வீரர்கள், 2போலீசார் மற்றும் பொதுமக்கள் என 6 பேரை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்று விட்டனர்.. இதையடுத்து நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் தங்கள் தலைவரின் உடலை ஒப்படைத்தால் மட்டுமே பிணைக்கைதிகளை விடுதலை செய்வோம் என பழங்குடியின மக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனால் வேறு வழியின்றி கொரோனாவால் இறந்து புதைக்கப்பட்ட பழங்குடியின தலைவரின் உடலை மீண்டும் தோண்டியெடுத்து அந்த மக்களிடமே ஒப்படைத்தனர். அதன்பின் தங்கள் தலைவரின் உடலை பெற்றுக்கொண்ட பழங்குடியின மக்கள் பிடித்து வைத்திருந்த ராணுவ வீரர்கள் உட்பட 6 பிணைக்கைதிகளை விடுதலை செய்தனர்.

Categories

Tech |