தமிழகத்தில் கொரோனா வைரஸ் சமூக பரவல் இல்லை என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கிண்டியில் 750 படுக்கைகள் கொண்ட கொரோனா சிறப்பு மருத்துவமனையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் கொரோனா சமூகப் பரவலாக மாற்றமுடியாது. இருக்கின்ற எல்லா இடத்திலும் நோய் பரவினால் தான் சமூக பரவல். ஒருவருக்கு நோய் ஏற்பட்டுவிட்டால், அவரவர் யார் யாரிடமெல்லாம் தொடர்பில் இருந்தார் என்பதை கண்டறிந்து, பரிசோதனை செய்து அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றோம். அது மட்டுமல்ல காய்ச்சல் முகாம் நிறைய அமைத்துள்ளோம்.
அதன் மூலம் அதிக அளவுக்கு பரிசோதனை செய்ததன் காரணமாக சுமார் பத்தாயிரம் பேர் கண்டறியப்பட்டு இருக்கிறார்கள். நோய் தொற்று உள்ளவர்கள், அறிகுறி இருக்கின்றவர்கள் என பலரை கண்டுபிடித்துள்ளோம். சென்னை மாநகரத்தில், மாநகராட்சி பகுதிகளில் வீடு வீடாக போய் மக்களை சந்தித்து உங்களுக்கு காய்ச்சல் இருக்கின்றதா ? சளி இருக்கின்றதா ? தொண்டைவலி இருக்கின்றதா ? நோய் அறிகுறி இருக்கிறதா ? என்று கண்டறிந்து, அப்படி ஏதாவது இருந்தால் உடனடியாக அருகில் இருக்கின்ற மருத்துவமனைக்கு அழைத்து பரிசோதனை செய்து வருகின்றோம்.