வெளிநாட்டில் தங்கி படிக்கும் மாணவர்களை வெளியேற்ற அமெரிக்கா முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக அமெரிக்காவில் பள்ளிகள் கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில் தற்போது வரை கல்வி மையங்கள் துவங்க எந்த ஒரு அறிவிப்பும் வரவில்லை. இதனால் அனைத்து வகுப்புகளையும் ஆன்லைன் முறைக்கு மாற்ற அமெரிக்க பல்கலைக் கழகங்கள் தெரிவித்துள்ளனர். அப்படி ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டால் வெளிநாட்டில் தங்கி பயிலும் மாணவர்கள் அமெரிக்காவிலிருந்து வெளியேற வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத்துறை காரணமாக அனைத்து பல்கலைக்கழகங்ளின் பாடப்பிரிவுகளையும் ஆன்லைன் கல்விக்கு மாற்றியுள்ளது.
இந்நிலையில் அமெரிக்காவில் தங்கி பயிலும் வெளிநாட்டு மாணவர்களும் ஆன்லைன் கல்விக்கு மாற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. ஆனால் அவ்வாறு மாறிய மாணவர்கள் அமெரிக்காவில் தொடர்ந்து இருக்க முடியாது என்றும் ஆன்லைன் கல்வி படிப்பிற்கு தங்களை பதிவு செய்த மாணவர்கள் அனைவரும் நேரடி வகுப்பில் கற்கும் வகையில் தங்கள் பாடத்திட்டங்களை மாற்ற வேண்டும். இல்லையெனில் குடியேற்றம் சம்மந்தமான விதிமீறல்கள் மற்றும் சட்ட விளைவுகள் போன்றவற்றை அவர்கள் அனுபவிக்க நேரிடும் எனவும்,
இதனால் அமெரிக்காவிலிருந்து கட்டாயமாக வெளியேற்றப்படுவார்கள் எனவும் அவர்கள் கூறியுள்ளனர். இதனை அடுத்து ஹார்வார்ட் பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவிப்பின்படி பல்கலைக்கழகத்தில் தங்கியிருக்கும் மாணவர்கள் உள்ளிட்ட அனைவரும் இனி அனைத்து பாடங்களையும் ஆன்லைன் மூலமே கற்க வேண்டும் என அறிவித்திருக்கிறது. இதனால் அமெரிக்காவில் தங்கி பயிலும் மாணவர்கள் இயல்பாகவே தாங்கள் தங்கியிருந்த பல்கலைக்கழகங்களை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது.