ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களுக்கு உச்சந்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி இருக்கின்றது.
ஓபிஎஸ் உள்ளிட்ட 11 சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று திமுகவின் சக்கரபாணி, வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்கள். இதில் சபாநாயகர் முடிவில் நீதிமன்றம் தலையிடாது என்று உயர்நீதிமன்றம் தெரிவித்ததையடுத்து, உயர் நீதிமன்றம் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப் பட்டது. கடந்த பிப்ரவரி மாதம் இந்த வழக்கின் தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம், சபாநாயகர் முடிவில் நாங்கள் தலையிட முடியாது. ஆனால் மூன்று ஆண்டுகாலம் சபாநாயகர் முடிவு எடுக்காமல்காலதாமதம் செய்துள்ளது ஏற்புடையதல்ல என்று கூறி சபாநாயகர் சரியான முடிவை எடுக்க வேண்டும் என்று வழக்கை முடித்து வைத்தார்கள்.
நான்கு மாத காலத்திலும் சபாநாயகர் எந்த ஒரு முடிவையும் எடுக்காததையடுத்து திமுக சார்பில் மீண்டும் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் உச்ச நீதிமன்றத்தின் அதிகாரத்தை பயன்படுத்தி நீங்கள் 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று சொல்லப்பட்டது. இதில், சபாநாயகர் அலுவலகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அதில், நாங்கள் சம்மந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் பிறப்பித்து இருக்கிறோம். அவர்கள் விளக்கங்களையடுத்து நடவடிக்கை எடுக்க முடியும் என்று சபாநாயகர் தரப்பில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த சூழலில்தான் இந்த வழக்கு விசாரணைக்கு எதிர் மனுதாரராக இருக்கக்கூடிய சட்டப்பேரவை செயலாளர், சபாநாயகர், உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களுக்கு உச்சநீதி மன்றத்தின் சார்பில் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கின் விசாரணை 4 வார காலத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.