காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதுார் கச்சிப்பட்டு பகுதியைச் சேர்ந்த குமார் என்பவரது ஜான்ரோஸ் (23). இவர் அதே பகுதியைச் சேர்ந்த கார்த்திக் (25) என்பவருடன், கடந்த ஜூன் 26ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் அவர் மீண்டும் வீட்டுக்கு வரவில்லை. இதனால் பயந்து போன அவரது குடும்பத்தினர், ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் காணாமல் போனதாக புகாரளித்தனர். இதையடுத்து வழக்குப்பதிவு செய்து போலீசார் ஜான்ரோஸை பல இடங்களில் தேடி வந்தனர்.
இந்தநிலையில், ஸ்ரீபெரும்புதுார் அருகே போந்தூர் கிராமத்திலுள்ள முட்புதரில் ஜான்ரோஸ் உடல் அழுகிய நிலையில் கிடப்பதாக தகவல் வந்தது. பின்னர் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்ட , போலீசார் பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து கார்த்தியிடம் போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில், ஜான்ரோஸ், கார்த்தியுடன் போந்தூர் கிராமத்திற்குச் சென்றபோது, அந்தபகுதியைச் சேர்ந்த சிலருடன் தகராறு ஏற்பட்டதில், ஜான்ரோஸ் அடித்துக் கொல்லப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் கொலையாளிகளை தனிப்படை அமைத்து தீவிரமாகத் தேடி வருகின்றனர்.