கோவையில் மைசூர்பாவை சாப்பிட்டால் கொரோனா குணமடையும் என விளம்பரம் செய்த கடை உரிமையாளரிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக மத்திய, மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை ஒருபுறம் மேற்கொண்டு வர, மற்றொருபுறம் இந்த வைரசுக்கு எதிரான தடுப்பு மருந்தை கண்டுபிடிப்பதில் உலக நாடுகளும் மும்முரம் காட்டி வருகின்றன. அந்த வகையில், சமீபத்தில் பதஞ்சலி நிறுவனம் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்து விட்டதாக தெரிவித்ததோடு மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் அனுமதி இல்லாமல் விளம்பரம் செய்து பரபரப்பை ஏற்படுத்தியது.
அதேபோல் தற்போது தமிழகத்தில் கோயம்புத்தூர் மாவட்டம் சின்னியம்பாளையம் பகுதியில் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. அங்குள்ள மூலிகை மைசூர்பா கடை ஒன்றில் பாதுகாப்பு துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இதற்கு காரணம் அந்தக் கடையில் மூலிகை மைசூர்பாவை சாப்பிட்டால் கொரோனா குணமடையும் என அனுமதி இன்றி விளம்பரம் செய்யப்பட்டது தான். இந்த விளம்பரத்தை பயன்படுத்தி கடை உரிமையாளரும் மைசூர்ப்பாவை விற்றுள்ளார். இது குறித்து கடை உரிமையாளரிடம் அதிகாரிகள் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.