தங்களது மாநில மக்களுக்கு வேலைவாய்ப்பை அளிப்பதற்காக ஹரியானா மாநில அரசு அறிவித்த திட்டம் மற்ற மாநில மக்களிடையேயும் வரவேற்பை பெற்றுள்ளது.
கார்ப்பரேட் எனப்படும் பன்னாட்டு தொழில் நிறுவனங்களாக இருக்கட்டும், தொழிற்சாலைகளாக இருக்கட்டும் வளர்ந்து வரக்கூடிய நகரங்களான சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா உள்ளிட்ட பகுதிகளிலும் அல்லது ஒவ்வொரு மாநிலத்திலும் தலைநகரங்களில் மட்டும் தான் நிறுவப்படுகின்றன. இப்படி நிறுவப்படும் தொழிற்சாலைகளால் அப்பகுதி மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பதை மையமாகக் கொண்டே அரசு முதலில் அனுமதி அளிக்கும். ஆனால் வேலை வாய்ப்பை அம்மாநில மக்களுக்கு மட்டும்தான் அதிக சதவிகித இட ஒதுக்கீடு கொண்டு வழங்க வேண்டும் என்ற சட்டம் அனைத்து மாநிலங்களிலும் முறையாக அமல்படுத்தப்படுவதில்லை.
உதாரணத்திற்கு கூறவேண்டுமானால், சென்னையில் வேலை பார்ப்பவர்களில் அப்பகுதியைச் சேர்ந்தவர்களை விட, பிறமாநில, மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் தான் அதிகம் இருப்பார்கள். கொரோனா வந்தபின் பிழைக்க வழி இல்லாமல் சென்னையை விட்டு வெளியேறியவர்கள் ஏராளம். கிட்டத்தட்ட 36 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இ-பாஸ் அப்ளை செய்து வெயிட் செய்து கொண்டிருப்பதாகவும் தகவல்கள் ஒருபுறம் கசிந்துள்ளன. அந்த வகையில், தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து தங்களது மாநிலத்திற்கு திரும்பும் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பை அளிக்கும் விதமாக ஹரியானா மாநில அரசு சிறப்பு திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது.
அதில், எந்த ஒரு பன்னாட்டு நிறுவனமாக இருந்தாலும் சரி, தொழிற்சாலைகளாக இருந்தாலும் சரி தங்களுடைய மாநிலத்தில் இருக்கக்கூடிய மக்களுக்கு 75 சதவிகித இட ஒதுக்கீட்டை கட்டாயம் ஒதுக்கி அளிக்க வேண்டும் எனவும், அதற்குப் பிறகு பிற மாநிலங்களைச் சேர்ந்த மக்களை கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது. இதன்படி, பெரும்பான்மையான வேலைவாய்ப்பு அதே மாநிலத்தில் இருக்கக்கூடிய மண்ணின் மைந்தர்களுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்திட்டத்திற்கு ஹரியானா மாநில மக்களிடம் மட்டுமல்லாமல் பிற மாநிலங்களைச் சேர்ந்த மக்களிடமும் வரவேற்பை பெற்றுள்ளது. அந்தந்த மாநிலத்தில் இயங்க கூடிய தொழிற்சாலைகளும், நிறுவனங்களும் அந்த மாநிலத்தின், மண்ணின் மைந்தர்களுக்கு வேலை வாய்ப்பை அள்ளித் தந்தால் அவரவர் சொந்த ஊரிலேயே காலூன்றி சிறப்பாக அனைவரும் வாழலாம்.