ஹைதராபாத்தில் தனியார் மருத்துவமனையில் பெண் மருத்துவர் மற்றும் அவரது தந்தைக்கு கொரோனா சிகிச்சைக்கு ஆக்சிஜன் மருந்து வழங்கியதற்கு பல லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும் என்று அடுத்து அழுத்தம் கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது.
பெண் மருத்துவர் விஜயா, தந்தையார் யாதகிரிராவ் இருவரும் உடல்நலம் பாதித்ததால் ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றனர். அவர்கள் இருவருக்கும் நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து இருவருக்கும் கடந்த 15 நாட்களாக சிகிச்சை அளித்த மருத்துவமனை அதற்கான கட்டணமாக பல லட்சம் ரூபாய் செலுத்த வற்புறுத்தி உள்ளது. இது குறித்த புகாரை செல்பியாக வீடியோ பதிவு செய்துள்ள மருத்துவர் விஜயா தனியார் மருத்துவமனை நிர்வாகம் முறைகேடாக கட்டணம் வசூலிப்பதாக குற்றம்சாட்டி இருக்கிறார்.
அவர் கூறும் போது, ஊசிகள், மருந்துகள் எதுவும் கொடுக்காமலேயே பல லட்சம் ரூபாயை ஏன் வாங்குகிறீர்கள் என்று கேள்வி எழுப்பினேன். தவறான முறையில் சிகிச்சைக் கட்டணம் குறிப்பிடப்பட்டு இருப்பதை மருத்துவ நிர்வாகத்திடம் சுட்டிக்காட்டினேன். உடனே எங்களை வெளியேறும்படி கூறினார்கள். இது என்ன நியாயம் அவர் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.
பெண் மருத்துவரின் வீடியோ பதிவைப் பார்த்த தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், தனியார் மருத்துவமனையை காணொளி மூலம் ஆய்வு செய்தார். அதே போல அங்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகள் இருவருக்கும் மூச்சு திணறல் இருந்தும் வென்டிலேட்டர் வழங்கவில்லை என்று புகார் தெரிவித்து வீடியோ வெளியிட்ட பின்னர் இறந்து விட்டனர். தற்போது தனியார் மருத்துவமனையில் கட்டண கொள்ளை குறித்து பெண் மருத்துவரை வெளியிட்டுள்ள வீடியோ தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.