தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது மாணவர்களையும், பெற்றோர்களையும் அதிர்ச்சி அடையவைத்துள்ளது.
கொரோனா ஊரடங்கு காலத்தில் தனியார் கல்வி நிறுவனங்கள் கட்டணம் வசூலிக்க கூடாது என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து தனியார் கல்வி நிறுவனங்களின் சங்கங்கள் சார்பில் பழனியப்பன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் நீதிபதி மகாதேவன், தனியார் கல்வி நிலையங்களில் கட்டணம் வசூலிக்காமல் ஆசிரியர்களுக்கும், ஆசிரியர்கள் அல்லாத அலுவலர்களுக்கும் எப்படி ஊதியம் கொடுக்க முடியும் என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.
3 தவணையாக:
இது தொடர்பாக தமிழக அரசிடம் மனு கொடுங்கள் என்று வலியுறுத்திய நீதிமன்றம் தவணை முறையில் கட்டணம் வசூலிக்க அரசு முடிவு எடுக்கும் படியும் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வர வில்லை என்றாலும், தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. தமிழக அரசின் சார்பில் உயர் கல்வித்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பதில் மனுவில், தமிழகத்தில் உள்ள தனியார் சுயநிதி கல்லூரிகள் மூன்று தவணைகளாக கட்டணம் வசூல் செய்யலாம் என்று தமிழக அரசு மனுவில் கூறியுள்ளது.
சுயநிதி கல்லூரிகள்:
இந்த வருடம் ஆகஸ்ட் மாதம், டிசம்பர் மாதம், அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் என்ற மூன்று தவணைகளில் தனியார் சுயநிதி கல்லூரிகள் கட்டணம் வசூலிக்க அனுமதிக்கபட்டுள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. தனியார் பள்ளிகள் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக பின்னர் அறிவிக்கப்படும் என்றும் சுயநிதி கல்லுரிகளில் மட்டும் தற்போது கட்டணம் வசூல் செய்ய அரசு அனுமதி வழங்கியுள்ளது.கல்லூரிகளுக்கு கல்விக் கட்டணத்தை நிர்ணயம் செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழு பரிந்துரையின் அடிப்படையில் கட்டணத்தை வசூலிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
அதிர்ச்சி:
பள்ளிகளுக்கான கல்விக் கடனை நிர்ணயிப்பதற்கு சமீபத்தில் தான் ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவரை அரசு நியமித்து இருப்பதால் தனியார் பள்ளி கட்டணம் குறித்து முடிவெடுக்க காலதாமதம் ஆகும் என தெரியவந்துள்ளது. கடந்த 4 மாதங்களாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் அனைவரும் வருமானமின்றி வீட்டிற்குள் முடங்கி இருக்கின்றனர். இந்த நிலையில் தமிழக அரசு தனியார் கல்லூரிகள் கட்டணம் வசூலிக்க அனுமதி அளித்திருப்பது பெற்றோர்களையும், மாணவர்களையும் அதிர்ச்சி அடையவைத்துள்ளது.