உத்தர பிரதேசத்தில் டிஎஸ்பி உட்பட 8 காவலர்களை கொலை செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி விகாஸ் துபேயை காவல்துறையினர் கைது செய்தனர்.
உத்தர பிரதேச மாநிலத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட பிரபல ரவுடியான விகாஸ் துபேயை கைது செய்வதற்காக, கடந்த 3ஆம் தேதி கான்பூர் அருகிலுள்ள பிகாரு கிராமத்திற்கு காவல்துறையினர் சென்றனர். அப்போது அவன் மற்றும் அவனது கூட்டாளிகள் திடீரென துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுட்டனர். இதில், காவல்துறையினர் தரப்பில் டிஎஸ்பி உள்ளிட்ட 8 காவலர்கள் உயிரிழந்தனர். காவல்துறையினர் நடத்திய தாக்குதலில் 2 ரவுடிகள் பலியாகினர்.
இதையடுத்து தப்பி ஓடிய விகாஸ் துபே மற்றும் அவனது கூட்டாளிகளை காவல்துறையினர் வலைவீசி தேடி வந்தனர். அவனை பிடிக்க நாடு முழுவதும் 20 போலீஸ் குழுக்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தன.. மேலும் தலைமறைவான ரவுடி விகாஸ் துபேயின் வீட்டை பொக்லைன் எந்திரம் மூலம் காவல் துறையினர் இடித்து தரைமட்டமாக்கினர்.. காவல் துறையினரின் தேடுதல் வேட்டையின்போது விகாஸ் துபேயின் கூட்டாளிகள் 3 பேர் அதிரடியாக சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில், மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைனில் விகாஸ் துபேயை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.. அதனைத்தொடர்ந்து காவல் நிலையத்தில் வைத்து அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், விசாரணைக்கு பின்னர் அவர் உ.பி. கொண்டு செல்லப்படலாம் என்றும் சொல்லப்படுகிறது.