பாகிஸ்தான் முஸ்லிம் லீக் காயித் கட்சி இந்துக் கோவில் கட்ட தடை விதிக்கக் கோரி இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் (Islamabad) இருக்கும் எச்9 பகுதியில் 20,000 சதுர அடியில் முதன் முதலாக இந்து கோவில் கட்டப்படுகிறது. இஸ்லாமாபாத் இந்து பஞ்சாயத்து (Islamabad Hindu Panchayat) என்ற அமைப்பின் சார்பில் கட்டப்படும் இந்த கோவிலுக்காக, கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு தான் அடிக்கல் நாட்டப்பட்டது. இந்நிலையில் அந்நாட்டின் பிரதமர் இம்ரான்கான் தலைமையிலான கூட்டணி ஆட்சியில் அங்கம் வகிக்கும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் காயித் கட்சி (Pakistan Muslim League-Quaid) இஸ்லாமாபாத்தில் இந்து கோவிலை கட்டக்கூடாது என்று கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இது தொடர்பாக அந்தகட்சியை சேர்ந்த ஒரு சிலர் இந்துக் கோவில் கட்டுவதற்கு தடை விதிக்கக் வேண்டும் என கோரி இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்ததாவது, அவர்கள் கோவில் கட்டுவதற்கான நிலத்தை மூலதன மேம்பாட்டு ஆணையம் (Capital Development Authority) ஒதுக்குவதை இரத்து செய்ய வேண்டும் என்றும், இஸ்லாமாபாத் இந்து பஞ்சாயத்து அமைப்பிற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கின் மீது விசாரணை நடத்திய இஸ்லாமாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி அமீர் பாருக், இந்து கோவில் கட்ட தடை விதிக்க முடியாது என்று கூறி அந்த மனுவை தள்ளுபடி செய்தார். மேலும் நிலத்தை யாருக்கு எதற்காக ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பதை மூலதன மேம்பாட்டு ஆணையமே முடிவு செய்யும்.. அதில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் நீதிபதி கூறினார்..