சென்னை அடுத்த அம்பத்தூர் வெங்கடாபுரம் கன்னிப்பசெட்டி தெருவில் வசித்து வரும் ஜிலான் என்பவர் தொழிற்கல்வி முடித்துவிட்டு அதே பகுதியில் உள்ள செல்போன் கடையில், வேலை பார்த்து வந்தார். அப்போது ஒரகடம் சாலையில் வசித்து வரும் பெண் ஒருவர் செல்போன் கடைக்கு வர, ஜிலானுக்கும், அந்த பெண்ணுக்கும் காதல் மலர்ந்தது.. இருவரும் ரொம்ப தீவிரமாக காதலித்து வந்துள்ளனர். தற்போது ஊரடங்கு அமலில் இருப்பதால் கடையை திறக்க முடியாத சூழலால் காதலியை சந்திக்க முடியாமல் மிகவும் கஷ்டப்பட்டு வந்துள்ளார் ஜிலான்..
இந்நிலையில் நேற்றிரவு (ஜூலை 8) நண்பனின் பிறந்தநாள் விழாவிற்குச் சென்று கொண்டாடி விட்டு வரும்போது, காதலியைப் பார்க்க வேண்டும் என்ற ஆசையில் சுவர் ஏறி அவரது வீட்டுக்கு யாருக்கும் தெரியாமல் சென்றுள்ளார்.. அந்தநேரம் பார்த்து பக்கத்து வீட்டுக்காரர் வெளியே வர, பயத்தில் தப்பி ஓடிய ஜிலான், தவறி அருகேயிருந்த 75 அடி தண்ணீர் இல்லாத கிணற்றில் தவறி விழுந்தார். இதனைப் பார்த்த பக்கத்து வீட்டுக்காரர் தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினருக்கு தகவல் கொடுத்தார்.. இதனிடையே அவர் என்னை காப்பாற்றுங்கள் என சத்தம் போட காதலி மற்றும் குடும்பத்தினர் அங்கு வந்துவிட்டனர்.. அதுமட்டுமின்றி சுற்றியுள்ள மக்களும் அங்கு திரண்டனர்..
இதையடுத்து தகவலறிந்து அங்கு வந்த தீயணைப்பு மற்றும் மீட்புப்படை வீரர்கள் கிணற்றில் இறங்கி படுகாயத்துடன் இருந்த ஜிலானை மீட்டனர். பின்னர் அவர் அம்பத்தூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.