நான் பெரும் புகழோடும் வசதியுடனும் வாழ்வதற்கு காரணம் இயக்குனர் கே.பாலச்சந்தர் ஐயா தான் என நடிகர் ரஜினிகாந்த் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் மறைந்த இயக்குனர் கே.பாலசந்தரின் 90-வது பிறந்ததினத்தை முன்னிட்டு அவருக்கு வாழ்த்துகளை வீடியோவாக சமூக வலைதலத்தில் பதிவிட்டிருந்தார். அதில் அவர் கூறியதாவது :- “எனது குருவான கே.பி பாலசந்தருக்கு இன்று 90-வது பிறந்தநாள். கே.பாலசந்தர் அவர்கள் என்னை அறிமுகப்படுத்தவில்லை என்றாலும் நான் நடிகனாகியிருப்பேன். ஆனால் கன்னட மொழியில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருப்பேன். இன்று நான் புகழோடும் வசதியுடன் வாழவும் காரணம் கே.பாலச்சந்தர் அவர்கள் தான். என்னிடம் இருந்த மைனஸ் அனைத்தையும் நீக்கி எனக்குள் இருக்கும் பிளஸ்களை எனக்கே அறிமுகப்படுத்தி முழு நடிகனாக உருவாக்கி நான்கு படங்களில் எனக்கு ஏற்ற கேரக்டர் கொடுத்து ஒரு நட்சத்திரமாக தமிழ் சினிமாவிற்கு என்னை அறிமுகப்படுத்தினார்.
என் வாழ்க்கையில் அப்பா அம்மா அண்ணா இவர்கள் வரிசையில் கே.பியும் ஒருவரே. நான் மட்டுமல்ல இன்னும் எத்தனையோ நடிகர்கள் அவரால் பலன் பெற்று வாழ்ந்து வருகின்றனர். நான் பல இயக்குனர்களிடம் பணியாற்றி இருக்கிறேன். ஆனால் கே.பாலச்சந்தர் அவர்களோடு பணியாற்றும்போது திரைப்படம் சூட்டிங்கில் லைட் செட் போடக்கூடிய எங்கேயோ மேலே உட்கார்ந்து இருக்கும் நபர் கூட அங்கிருந்து எழுந்து அவருக்கு வணக்கம் செலுத்தும் அளவுக்கு மதிப்பு மிக்கவர். அதுபோன்ற ஒரு கம்பீரம் அவரை தவிர யாருக்கும் இல்லை. கே.பி அவர்கள் வாழ்ந்த காலத்தில் நல்ல தந்தையாகவும், கணவனாகவும், மகனாகவும் இயக்குனராகவும் மிகச்சிறந்த விளங்கினார். இன்னும் நிறைய நாட்கள் அவர் இவ்வுலகில் வாழ்ந்திருக்கலாம். அவர் ஒரு மிகப்பெரிய மகான் எத்தனை பேருக்கோ வாழ்க்கை கொடுத்து தன்வாழ்வில் ஒரு அர்த்தத்தோடு வாழ்ந்த என்குரு அவர்களை நினைவு கூறுவதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்”, என்று ரஜினிகாந்த் அந்த வீடியோவில் மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.