செங்கல்பட்டு அருகே ஊராடங்கினால் ஏற்பட்ட விரக்தியால் கடை உரிமையாளர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவானது கடந்த மார்ச் 23-ம் தேதி முதல் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து ஆறாவது கட்டமாக தொடரும் ஊரடங்கினால் பலர் வேலை வாய்ப்புகளை இழந்தும், பலர் தொழில் முடக்கத்தாலும் மன விரக்தியில் காணப்படுகின்றனர். இந்த பிரச்சனையெல்லாம் முடிவடைந்து இதிலிருந்து மீண்டு வருவதற்கு சில மாதங்கள் ஆகும் என்று இருக்கும் பட்சத்தில், என்ன செய்வது என்று தெரியாமல் பலரும் குழம்பி தான் இருக்கிறார்கள். இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி பகுதியை அடுத்த சுவாமிநாதன் தெருவில் வசித்து வந்த ராஜசேகரன் என்பவர் ஊரடங்கால் மிகவும் மன விரக்தி அடைந்து உள்ளார்.
அதற்கான காரணம் அவர் கூடுவாஞ்சேரி பேருந்து நிலையத்தில் மளிகை கடை ஒன்றை வைத்து நடத்தி வந்துள்ளார். ஊராடங்கினால் மளிகை கடையில் வியாபாரம் இல்லாததாலும், கையில் வைத்திருந்த சேமிப்பு பணமும் கரையத் தொடங்கியதாலும் விரக்தியடைந்த அவர் தனது மளிகை கடையிலையே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பின் இதுகுறித்து காவல் நிலைத்தில் தகவல் தெரிவிக்கப்பட சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த தற்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.