Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

நள்ளிரவில் விசாரணை… பெண்களிடம் அத்துமீறிய இன்ஸ்பெக்டருக்கு கட்டாய ஒய்வு..!!

பெண்களிடம் விசாரிப்பதாக நள்ளிரவில் பாலியல் ரீதியாக பேசிவந்த சிறுகனூர் இன்ஸ்பெக்டர் மணிவண்ணனுக்கு கட்டாய ஓய்வளித்து திருச்சி டிஐஜி பாலகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.

திருச்சி மாவட்டம் சிறுகனூர் காவல்நிலையத்தில் இன்ஸ்பெக்டராக இருந்தவர், மணிவண்ணன். இவர் இதற்கு முன்னதாக பணியாற்றிய காவல் நிலையங்களில் புகார் அளிக்க வரும் பெண்களிடம் நள்ளிரவு நேரத்தில் அல்லது யாரையும் அழைத்து செல்லாமல் தனியாக சென்று விசாரணை என்கிற பெயரில் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இதுபற்றி காவல் உயர் அலுவலர்களுக்குத் தொடர்ந்து புகார்கள் வந்துள்ளது. அதுமட்டுமின்றி காவல் நிலையத்தில் பணிபுரியும் பெண் காவலர்களிடமும் அநாகரிகமான முறையில் பேசுவதாகப் புகார் எழுந்தது.

திருச்சி மாநகரம், பொன்மலை காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக இருந்தபோது, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் முனைவர் படிப்பு படிப்பதற்காக வந்த இலங்கை பெண் ஒருவரின் விசா சம்பந்தமான பிரச்சனையில் நேரடியாக அவரது வீட்டுக்குச் சென்று, தவறாக நடக்க முயற்சி செய்தது பெரிய பிரச்சனையாக உருவெடுத்தது. இதன் காரணமாக அவர் பெரம்பலூர் மாவட்டத்திற்குப் பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.

பெரம்பலூரில் பணியாற்றியபோதும் அவர் சும்மா இருக்கவில்லை.. அங்கு புகார் அளிக்க வந்த பெண்ணிடம் நள்ளிரவு 12 மணிக்கு தொடர்புகொண்டு தொடர்ந்து விசாரணை என்ற தொனியில் தவறாக பேசியதும், பயந்துபோன அந்த பெண், திருச்சி காவல் சரக துணைத் தலைவர் (டிஐஜி) பாலகிருஷ்ணனிடம் புகாரளித்தார்.

இந்த சம்பவம் குறித்து நீதி விசாரணை நடத்த அவர் உடனடியாக உத்தரவிட்டார். அதன்படி நடத்தப்பட்ட விசாரணையில் மணிவண்ணன் தொடர்ந்து இதுபோன்ற ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து மணிவண்ணனை கட்டாய பணி ஓய்வில் செல்ல பாலகிருஷ்ணன் அதிரடியாக உத்தரவிட்டார்.. பின், கட்டாய ஓய்வில் செல்வதற்கான உத்தரவு நகல் வழங்கப்பட்டதை தொடர்ந்து  அவர் பணியிலிருந்து ஓய்வு பெற்றார்.

Categories

Tech |