சிறையில் அடைக்கப்பட்டுள்ள சித்த மருத்துவர் தணிகாசலத்திற்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
சித்த மருத்துவத்தின் மூலம் குணப்படுத்த கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்து விட்டதாகவும், தன்னிடம் சிகிச்சை பெற்றவர்கள் குணமடைந்துள்ளனர் என்றும் சித்த மருத்துவர் தணிகாசலம் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இது தொடர்பாக அவருக்கு எதிராக மருத்துவ கவுன்சிலிங் அளித்த புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு வழக்கு பதிவு செய்தது. அதையடுத்து மேலும் இரண்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து கடந்த மே மாதம் தணிகாசலம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் அவரை குண்டர் சட்டத்தில் அடைக்க சென்னை மாநகர ஆணையர் உத்தரவு பிறப்பித்திருந்தார். இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. இந்த வழக்கில் தான் சித்த மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கும்போது வெறுப்புணர்வுடன் பார்க்கிறீர்களா ? என்று சமீபத்தில் நீதிபதிகள் கேள்வி கேட்டனர்.
இந்த நிலையில் தணிகாசலம் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யத மனுவில் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. நான் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டேன் என்று விற்பனை செய்யவில்லை என்றும், நோய் எதிர்ப்பு சக்தி தரக்கூடிய மருந்துகளை தான் விற்பனை செய்வதாக தணிகாசலம் கூறியதை அடுத்துஅவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. தணிகாசலம் குண்டர் சட்டத்தில் சிறையில் இருப்பதால் அவர் நிபந்தனை ஜாமீன் மூலம் சிறையிலிருந்து வெளிவர முடியாத நிலை இருக்கிறது.