கொரோனா பாதுகாப்பு கவச உடையை நாய் ஒன்று கடித்து இழுத்துச் சென்ற சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை கொடிசியா ‘டி’ அரங்கில் கொரோனா தொற்று நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கு 400 படுக்கை வசதிகளுடன் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது. இங்கு கொரோனாவால் மிகவும் பாதிக்கப்படாமல் சாதாரண நிலையில் உள்ளவர்களுக்கு மட்டும் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கொரோனா தடுப்பு கவச உடையணிந்து கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளித்து வருகின்றார்கள். இவர்கள் உபயோகப்படுத்தப்பட்ட பாதுகாப்பு உடைகள் அங்கிருக்கும் ஒரு பெட்டியில் வைக்கப்பட்டிருந்தது. கொடிசியா பகுதியில் தெருநாய்கள் அதிக அளவில் சுற்றி திரிகின்றது..
இந்நிலையில், உபயோகப்படுத்தப்பட்ட பாதுகாப்பு கவச உடையை தெருநாய் ஒன்று கவ்வி இழுத்துச்சென்றது. இதனால் அந்த நாய்க்கு கொரோனா தொற்று பாதிப்பு வர வாய்ப்பிருப்பதால் அப்பகுதியில் நடமாடும் பொதுமக்களுக்கும் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பயன்படுத்தப்பட்ட பாதுகாப்பு கவச உடைகள், மாஸ்க்குகள் மற்றும் மருத்துவக்கழிவுகளை மிகுந்த பாதுகாப்புடன் அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.