இந்தியா தடை செய்த சீன நாட்டின் செயலிகளை 79 கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இந்தியா-சீனா எல்லையோரம் இருக்கும் லடாக் பகுதியில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இரு நாட்டு வீரர்களும் மோதிக்கொண்டனர். இதில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். இந்த சம்பவத்தால் இந்தியா பல்வேறு வகைகளில் சீனாவிற்கு பதிலடி கொடுத்து வருகிறது. இந்த மோதல் நிகழ்ந்த பிறகு, நாடு முழுவதும் சீன பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள், கோசங்கள் மக்கள் மத்தியில் எதிரொலித்தன.
அதனைத் தொடர்ந்து மத்திய அரசு அதிரடி நடவடிக்கையாக டிக் டாக், யூசி ப்ரவுசர், ஹலோ உள்ளிட்ட சீன நாட்டின் 59 மொபைல் செயலிகளுக்கு அதிரடி தடை விதித்தது. இந்திய நாட்டின் இறையாண்மைக்கும், பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக இந்த செயலிகள் இருப்பதாக மத்திய அரசு விளக்கம் அளித்தது. இந்த நிலையில்தான் தற்போது மத்திய அரசாங்கம் சீன நாட்டின் 59 செயலிகளின் நிறுவனத்திற்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் சார்பில் அனுப்பப்பட்டுள்ள நோட்டீஸில், இந்திய புலனாய்வு மற்றும் குளோபல் சைபர் கிரைம் கண்காணிப்பு அமைச்சகத்தின் மூலமாக இந்த செயலிகளின் நடவடிக்கை மற்றும் பின்னணி குறித்த தகவல்கள் கிடைத்துள்ளது. எனவே செயலிகளின் தோற்றம், அதன் நிறுவன அமைப்பு, அதற்கான நிதி, டேட்டா மேனேஜ்மெண்ட், நிறுவனத்திற்கான நடைமுறைகள், அதைப் பயன்படுத்தும் சர்வர் உள்ளிட்ட விவரங்களை உடனடியாக தெரிவிக்கவும்.
வருகின்ற ஜூலை 22 ஆம் தேதிக்குள் செயலி குறித்து கேட்கப்பட்டுள்ள 79 கேள்விகளுக்கு நிறுவனம் பதிலளிக்க வேண்டும். அந்த பதிலில் முரண்பாடு இருக்கும் பட்சத்திலோ அல்லது பதிலளிக்கவில்லை என்றாலோ செயலிகளுக்கு இந்தியாவில் நிரந்தர தடை விதிக்கப்படும் என்று மத்திய அரசு அனுப்பியுள்ளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.