அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சம் தொட்டுள்ளது மக்களை அதிரவைத்துள்ளது.
உலகிற்கே பெரிய சவாலாக இருந்து வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் திணறி வருகின்றன. எப்படியாவது மருந்து கண்டுபிடித்து, மக்களுக்கு வழங்கி கொரோனாவை விரட்டி அடிக்க வேண்டும் என்று ஒவ்வொரு நாட்டு ஆய்வாளரும் வினாடி கூட தவறவிடாமல் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் முனைப்பு காட்டி வருகின்றனர். ஒருபுறத்தில் இதன் தாக்கம், வேகம் மக்களை மரண தாண்டவமாடிக் கொண்டிருக்கின்றது.
ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் கனவாக இருக்கும்…. நாம் இங்கு தான் பணி புரிய வேண்டும் என்று கனவுகளில் வந்து போகும் உலக வல்லரசான அமெரிக்காவை கொரோனா குதறி எடுத்துள்ளது. அனைத்து வசதிகளும், சுகாதார கட்டமைப்புகளும், மக்களிடையே விழிப்புணர்வும் இருந்தும் அமெரிக்காவில் கொரோனாவின் வேகம் உலக நாடுகளின் பல அரசுகளை கதிகலங்க வைத்துள்ளது. அமெரிக்கா மக்கள் வாழ தகுதியற்ற நாடாக மாறிவிடுமோ என்ற எண்ணம் வருவதை போல கொரோனா கட்டுக்கடங்காமல் பரவி வருகின்றது.
கடந்த சில நாட்களாகவே தினம்தோறும் பாதிப்பாகும் கொரோனா விகிதம் தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்வது அமெரிக்க நாட்டு மக்களை நடுங்க வைத்துள்ளது. தொடக்க காலத்தில் எல்லாம் 20,000 – 22, 000 – 30 ஆயிரம், 35 ஆயிரம், 40 ஆயிரம் என்று பதிவாகிய இந்த எண்ணிக்கை ஒரு கட்டத்தில் 50 ஆயிரத்தை கடந்து 60 ஆயிரத்தை தாண்டி தற்போது 70 ஆயிரத்தை மிஞ்சியுள்ளது வேதனை உச்சமாக பார்க்கப்படுகின்றது. நேற்று ஒரே நாளில் மட்டும் இதுவரை இல்லாத அளவாக 71,787 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் மொத்த பாதிப்பு 32.91 லட்சத்தை தாண்டியுள்ளது. புதிதாக 849 பேர் உயிரிழந்ததால் மொத்த உயிரிழப்பு 1.36 லட்சத்தை கடந்துள்ளது. கடந்த இரண்டு நாட்களில் 60 ஆயிரத்துக்கும் மேல் சென்ற பாதிப்பு நேற்று 70 ஆயிரத்தை தாண்டியது அமெரிக்க மக்களிடையே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எப்படி இருந்தாலும் இந்த மனித சமூகம் கொரோனாவை வீழ்த்தும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.