வருகின்ற 14ஆம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் மாநில அரசு பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டது. குறிப்பாக தலைநகர் சென்னை கொரோனாவின் மையமாக விளங்கிய சூழலில், முன்மாதிரியான பல முயற்சிகளை மேற்கொண்டது தமிழக அரசாங்கம். சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். ஐந்து அமைச்சர்கள் அமைச்சர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. தொடர்ந்து கண்காணிப்பு பணிகள், தடுப்பு நடவடிக்கைகள் என தமிழக அரசின் முயற்சியால் சென்னையில் கொரோனா தற்போது கட்டுக்குள் வந்ததுள்ளது.
ஆனால் கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் பிற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கின்றது. குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் தென் மாவட்டங்களான மதுரை, தேனி, வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் இருந்து வருகின்றது.
இந்த நிலையில் வருகின்ற செவ்வாய்க்கிழமை 14ம் தேதி மாலை 5 மணிக்கு தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடக்க இருக்கும் இந்த கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் பேசப்படுகின்றன. குறிப்பாக தென் மாவட்டங்களில் பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த என்ன மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் ? சென்னையைப் போன்று அனைத்து பகுதிகளிலும் முடக்கத்தை அறிவித்து கட்டுப்படுத்தலாமா ? அதற்கென்று தனி குழுக்களை அமைக்கலாமா ? போன்ற பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட இருக்கின்றன. எனவே இந்த அமைச்சரவை கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகின்றது.