ஜூலை 14ஆம் தேதி முதல் மாணவர்களின் வீட்டிற்கே புத்தகங்களை கொண்டு வழங்குவதற்கான ஆலோசனைகள் நடைபெற்று வருவதாக கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவானது கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டதால், மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்பு எடுக்கும் திட்டம் நடைமுறைக்கு வரும் என முதலில் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்த நிலையில், பெரும்பாலான மாணவர்களின் வீட்டில் இணையம் மற்றும் மொபைல் வசதிகள் இல்லாத காரணத்தினால் தொலைக்காட்சிகள் மூலம் மாணவர்களுக்கு பாடம் எடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும்,
விரைவில் பள்ளி மாணவர்களுக்கு புத்தகத்தை வழங்க ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். இந்நிலையில் வருகின்ற ஜூலை 14-ஆம் தேதி தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் இருக்கக்கூடிய பள்ளி மாணவர்களுக்கு வீடு வீடாக சென்று புத்தகம் வழங்க தமிழக அரசுடன் ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தெரிவித்த அமைச்சர் செங்கோட்டையன், புத்தகங்களை மாணவர்கள் பெற்ற பின் தொலைக்காட்சி வாயிலாக நேர அட்டவணைப்படி பாட வகுப்பு ஒளிபரப்பு செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.