திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி சைதாப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணவேணி. வயது 35 ஆகிறது.. இந்நிலையில் இவருக்கும், இவரது கணவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் கடந்த ஜனவரி மாதம், கணவரைக் கொன்றுவிட்டு தலைமறைவாக இருந்துள்ளார்.
இதையடுத்து இவரை ஆரணி டவுன் போலீசார் குண்டர் சட்டத்தின் கீழ், ஜூலை 4ஆம் தேதி கைது செய்தனர். அதனைத்தொடர்ந்து ஜூலை 7ஆம் தேதி விசாரணைக் கைதியாக வேலூர் மாவட்டம் தொரப்பாடியிலுள்ள வேலூர் பெண்கள் தனிச்சிறையிலடைக்கப்பட்டார்.
பின்னர் கர்ப்பிணியான கிருஷ்ணவேணி பிரசவத்திற்காக அடுக்கம்பாறையிலுள்ள வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் கடந்த 2 நாட்களுக்கு முன் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு சிகிச்சையிலிருந்த கிருஷ்ணவேணி இன்று காலை யாருக்கும் தெரியாமல் தனது சிறைப் புடவையை மாற்றிக்கொண்டு திடீரென ஆஸ்பத்திரியில் இருந்து தப்பியோடியுள்ளார். இது குறித்து தகவலறிந்த சிறைத் துறை போலீசார் தப்பியோடிய அவரை தேடி வருகின்றனர்.