தூத்துக்குடி மாவட்டம் மரத்தொட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பேச்சிமுத்து. இவர் தனது மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் திருப்பூர் நாச்சிப்பாளையம் பகுதியில் தங்கியிருந்தார்.. தஞ்சாவூரில் டிரைவராக வேலைபார்த்த இவர் சில மாதத்திற்கு முன்பு திருப்பூரில் குடியேறினார். அங்கு கிடைத்த வேலைகளுக்குச் சென்றுவந்த இவர், நேற்று இரவு திருப்பூர் மங்கலம் சாலை லிட்டில் பிளவர் நகரில் கொடூரமான முறையில் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து அங்கு விரைந்து வந்த போலீசார், பேச்சிமுத்துவின் உடலைக் கைப்பற்றி, உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். மேலும், உடல் அருகே இருந்த 2 பட்டா கத்திகள் மற்றும் பைக்கையும் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
இவர் மீது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, நாச்சிப்பாளையத்திலிருந்து இவர் 15 கி.மீட்டர் தொலைவில் உள்ள லிட்டில் பிளவர் நகருக்கு ஏன் வந்தார், அவரைக் கொலைசெய்தது யார்? என்ற கோணங்களில் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.