அமிதாப்பச்சனுக்கு தொற்று உறுதியானதை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தொலைபேசி மூலம் நலம் விசாரித்துள்ளார்.
இந்தியாவில் ஒருசில மாநிலங்களைத் தவிர, மற்ற மாநிலங்களில் கொரோனா தொற்று பெருமளவு அதிகரித்து வருகிறது. மத்திய அரசு இதனை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் இந்திய திரையுலகின் முன்னணி நடிகரான அமிதாப்பச்சனுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இவர் மும்பையில் உள்ள ஞானவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் அவரை தொடர்ந்து அவரது மகன் அபிஷேக் பச்சனுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அமிதாப்பச்சன் அவர்கள் கடந்த 10 நாட்களாக தன்னுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த அனைவரையும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். கொரோனா தொற்று குறித்து அமிதாப் பச்சன் டுவிட் வெளியிட்ட சில நிமிடங்களில், அவர் விரைவில் நலம் பெற வேண்டி பலரும் டுவிட் செய்ய தொடங்கினர். சுரேஷ் ரெய்னா, சச்சின் டெண்டுல்கர், மகேஷ்பாபு, மோகன்லால், மம்முட்டி, சிரஞ்சீவி என ஒட்டு மொத்த திரை உலக பிரபலங்களும் அவரின் டுவிட்டுக்கு பதிலளித்துள்ளனர். இதற்கிடையில் அமிதாப்பச்சனின் நெருங்கிய நண்பரான ரஜினிகாந்த் தொலைபேசி வழியாக நலம் விசாரித்தார். மேலும் அவருடைய உடல்நலம் மற்றும் மருத்துவ சிகிச்சைகள் உள்ளிட்ட தகவல்களை குறித்தும் கேட்டறிந்துள்ளார்.