கிரீஸ் (greece) நாட்டு மாணவர் ஒருவர், ஸ்காட்லாந்திலிருந்து சைக்கிளில் சுமார் 3,000 கி.மீ. தூரம் பயணம் செய்து சொந்த ஊர் திரும்பி அசத்தியிருக்கிறார்.
கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தலால், உலகம் முழுவதுமுள்ள பல்வேறு நாடுகளில் போக்குவரத்து முடக்கம் செய்யப்பட்டுள்ளது. இதனால் பெரும்பாலான மக்கள் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்குச் செல்ல முடியாமல் மிகவும் தவித்து வருகின்றனர்.
இந்தநிலையில், ஸ்காட்லாந்தின் அபர்தீன் என்ற பகுதியில் படித்துவந்த கிளியான் என்ற கல்லூரி மாணவர், சைக்கிளில் 3,218 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்து தனது சொந்த ஊருக்குத் திரும்பி அசத்தியிருக்கிறார்.. அந்த மாணவரின் வீடு கிரீஸ் தலைநகர் ஏதென்சில் (athens) இருக்கிறது. இதனால் நாடு கடந்து தன்னுடைய சொந்த ஊருக்கு சைக்கிளிலேயே பயணித்து செல்ல கிளியான் முடிவு செய்தார்.
அதன்படி செல்லும் வழியில் தங்கிக்கொள்வதற்காக தற்காலிக கூடாரம், பிரெட் பாக்கெட்டுகள், வெண்ணெய் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு தன்னுடைய பயணத்தைத் தொடங்கினார் 20 வயதான கிளியான் (Kleon). இயல்பாகவே கிளியானுக்கு சாகசப் பயணங்களில் ஆர்வம் அதிகமாம்.. இவர் 7 வார கால பயணத்திற்கு பின் தன்னுடைய வீட்டை அடைந்திருக்கிறார்.
பயணத்தின் போது சாலையில் பல இடர்பாடுகள் ஏற்பட்டதாகவும், வண்டியின் டயர் அடிக்கடி பஞ்சரானதாகவும், இந்த பயணம் தனித்துவமானது என்றும் கிளியான் கூறினார்.. சூழ்நிலை சரியாகி இயல்பு நிலைக்கு திரும்பிய பிறகு மீண்டும் விமானத்தில் பறந்து கல்லூரிக்குத் திரும்ப இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.