சென்னையில் கட்டுக்கடங்காமல் பரவிவந்த கொரோனா வைரஸை தமிழக அரசு சிறப்பான நடவடிக்கை மூலம் கையாண்டு சென்னையை கொரோனாவின் பிடியிலிருந்து மீட்டுள்ளது. கடந்த ஒரு மாதத்திற்கு பிறகு ஆயிரத்து 200க்கும் கீழ் என்ற எண்ணிக்கையில் நேற்று சென்னையில் மட்டும் தொற்று கண்டறியப்பட்டது மக்களுக்கு ஒரு நம்பிக்கை ஏற்படுத்தும் செய்தியாக உள்ளது.
தலைநகர் சென்னையில் கொரோனாவில் இருந்து தப்பினாலும், தமிழகத்தின் பிற மாவட்டங்களில் தொடர்ந்து அதன் தாக்கம் அதிகரித்து வருகிறது. பிற மாவட்டங்களில் வேகமாக பரவும் கொரோனாவை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகங்கள் பல்வேறு விதமான முன்னெடுப்புகளையும், நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில் தற்போது கடலூர் மாவட்டத்தின் விருத்தாசலத்தில் நகராட்சியில் நாளை முதல் ஜூலை 31 வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் நேற்றைய நிலவரம் படி 1,510 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டு, 1067 பேர் குணமடைந்துள்ளனர். 437 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.