மத்திய பிரதேசத்தை தொடர்ந்து ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் அரசியலும் புயல் வீசத் தொடங்கியுள்ளது.அதிருப்தியில் துணை முதலமைச்சர் சச்சின் பைலட் தனது ஆதரவு எம்எல்ஏக்கள் 30 பேருடன் டெல்லியில் முகாமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ராஜஸ்தானில் கடந்த 2011ஆம் ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்றிய காங்கிரஸ் கட்சி சுயேச்சசைகள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. இருப்பினும் முதலமைச்சர் பதவியை பெற மூத்த தலைவர் அசோக் கெலாட் மற்றும் சச்சின் பைலட் இடையே போட்டி நிலவியது. இதனை தொடர்ந்து அசோக் கெலாட் முதலமைச்சராகவும், சச்சின் பைலட் துணை முதலமைச்சராகவும் பதவி ஏற்றனர்.
இருப்பினும் இருவருக்கும் இடையே உள்ள விரிசலை பயன்படுத்தி பாஜக ஆட்சியை கவிழ்க்க முயற்சிப்பதாகவும், காங்கிரஸ் எம்எல்ஏக்களிடம் குதிரை பேரத்தில் ஈடுபடுவதாகவும் காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இதுதொடர்பாக மாநில அரசின் தலைமை கொறடா மகேஷ் ஜோஷி அளித்த புகாரின் அடிப்படையில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆட்சி அமைக்க உதவினால் 1000 கோடி முதல் 2,000 கோடி ரூபாய் வரை சம்பாதிக்கலாம் என அவர்கள் தொலைபேசியில் பேசிக் கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
ராஜஸ்தான் அரசை கவிழ்க்க பாரதிய ஜனதா முயற்சிப்பதாக காங்கிரசை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் நேற்று முன்தினம் கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட்டனர். இதனால் ராஜஸ்தான் மாநில அரசியலில் பரபரப்பு ஏற்பட் டுள்ள நிலையில், துணை முதலமைச்சர் சச்சின் பைலட் தனது ஆதரவாளர்கள் 25 பேருடன் டெல்லியில் முகாமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்கள் அனைவரும் காங்கிரஸ் தலைவர் திருமதி சோனியா காந்தியை சந்தித்து பேச உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அதேபோல சச்சின் பைலட் தனது ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களுடன் பாஜகவின் தேசிய செயலாளர் ஜெ.பி நட்டவை சந்திக்க வாய்ப்பு உறுதிப்படுத்தப்படாத ஒரு தகவல் வந்துள்ளது. இதனை உறுதிப்படுத்திக் கொள்ளும் வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக மத்திய பிரதேச மாநில காங்கிரஸ் கட்சியில் இருந்து தனது ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களுடன் பாஜகவில் சேர்ந்து, காங்கிரஸ் ஆட்சியை கவிழ்த்த ஜோதிராதித்ய சிந்தியா சச்சின் பைலட் ஆதரவாக டுவிட் செய்துள்ளார். இதனால் இந்த விவகாரத்தில் பின்னால் அவர் இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.