நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், திமுக என்று சொன்னாலே ஒரு வன்முறைக் கலாச்சாரம், ஊழல்வாதிகள். இந்த இரண்டுமே திமுகவின் அடையாளம். வன்முறை, ஊழல் இந்த இரண்டும் திமுகவின் அடிப்படை கொள்கை. இது அவுங்க ரத்தத்திலேயே ஊறுனது. ஆரம்ப காலத்தில் நில அபகரிப்பு, கட்டப்பஞ்சாயத்து எல்லாமே திமுக ஆட்சிக் காலத்தில்தான் செய்யப்பட்டது. நில அபகரிப்பு சொல்ல முடியாத அளவுக்கு 2006 – 11 ஆம் ஆண்டு திமுக ஆட்சி காலத்தில் செய்யப்பட்ட போது அம்மா அவர்கள் நில அபகரிப்பு அனைத்தையும் தனி சட்டம் கொண்டு வந்து மீட்டு எல்லோருக்கும் கொடுத்தார்கள்.
துப்பாக்கி கலாச்சாரம் :
ஏழைகளின் நிலங்கள் கூட அந்த கால கட்டத்தில் அபகரிக்கப்பட்டது. ஆட்ட கடிச்சி , மாட்ட கடிச்சி, மனுச கடிச்சு என்று ஒரு பழமொழி இருக்கு.கடந்த காலத்துல ஓசி பிரியாணிக்கு அடி, ஓசி டீக்கு அடி, பியூட்டி பார்லரில் போய் அப்பாவி பெண்களை அடித்து சித்திரவதை, தள்ளுவண்டிகாரன் கடையில் போயி… அவனையும் போட்டு அடி அடின்னு அடிக்கிறது.இப்படி எல்லாம் செஞ்சுட்டு, இப்போ உச்சகட்டமாக துப்பாக்கி கலாச்சாரம் திமுக வில்ஏற்பட்டுச்சு. ஒரு பிரச்சனை என்றால் சட்டம் இருக்கு. சட்டப்படி மாவட்ட நிர்வாகத்திடம் போய் புகார் கொடுக்கலாம், ஜனநாயக நாடு இது. உரிய வகையில் நீதிமன்றங்கள் இருக்கு, தீர்வு காண்பதற்கு.
ஏற்றுக்கொள்ள முடியாது:
சட்டமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் சட்டத்தை நான் கையில எடுத்துப்பேன் …. நான் லைசென்ஸ் இல்லாத துப்பாக்கி வைத்து யாரை வேண்டுமானாலும் சுடுவேன் என்று சொன்னால் அது ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விஷயமாக நிச்சயம் சட்டம் பார்க்கும். சட்டம் அதன் கடமையை செஞ்சிருக்கு, மக்கள் புரிஞ்சுக்கோங்க.மதுரையில் சட்டமன்ற உறுப்பினர் மூர்த்தி வீடு புகுந்து செருப்பை காட்டி அடிக்கீறார் என்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள் என்று அமைச்சர் ஜெயக்குமார் மொபைலில் இருந்த வீடியோவை காட்டினார்.
அராஜகம், அட்டூழியம், அநியாயம் :
அப்போது அந்த வீடியோ குறித்து விளக்கிய அமைச்சர், செருப்பை காலில் இருந்து எடுத்து, குடிமகன் ரெண்டு பேரு வராங்க… இரண்டு பேரையும் அச்சுறுத்தும் வார்த்தைகளில் திட்டி செருப்பை தூக்கிக் காட்டுகிறார். ஒரு சட்டமன்ற உறுப்பினர் லட்சணத்தைப் பாருங்கள்…. ஆட்சியிலே இல்ல… ஆட்சியில் இல்லாதபோதே இப்படின்னா…. தப்பித்தவறி தப்பித்தவறி ஆட்சிக்கு வந்தா…. என்ன நிலைமை இருக்கும் யோசிச்சு பாருங்க…. துப்பாக்கி ஒவ்வொரு எம்எல்ஏ கிட்ட இருக்கும்.இதே மாதிரி எம்எல்ஏக்கள் வீடு போகுந்து எல்லாரையும் அடிப்பாங்க… இதுதான் கண்டிப்பா நடக்கும். எதற்கெடுத்தாலும் ஒரு அராஜகம், அட்டூழியம், அநியாயம் இது செய்வதே திமுகவின் வழக்கமாகி விட்டது.
திமுக என்றால் பயம்:
திமுக எம்எல்ஏ பொருத்தவரை அவரும், அவரு அப்பாவும் துப்பாக்கியை எடுத்து விட்டது என்பது நிச்சயமா துப்பாக்கி கலாச்சாரத்தை நோக்கி திமுக போய்விட்டது என்பதை தான் காட்டுகிறது. எங்க ஆள்களிடம் எந்த கள்ளத்துப்பாக்கி கிடையாது. என்னிடம் இரண்டு துப்பாக்கி இருக்கு, நான் லைசென்ஸ் வைத்துள்ளேன். இதய வர்மன் என்று பெயரை வைத்துக்கொண்டு இப்படி இதயம் இல்லாமல் இருக்கிறார். இதய வர்மன் கள்ளத்துப்பாக்கி வைத்துள்ளார், அவர் அப்பா கள்ளத் துப்பாக்கி வைத்துள்ளார் என்றால் இதேபோல திமுகவில் எல்லோரிடமும் துப்பாக்கி இருக்கும். எனவே பொதுமக்கள் அனைவரும் திமுகவை பார்த்தால் பயப்பட வேண்டிய அவசியம் உள்ளது என்று அமைச்சர் பேசினார்.