நாகை மாவட்டம், நாகூர் அடுத்த முட்டம் கிராமத்தைச் சேர்ந்த விஜயராஜ் என்பவரின் மகள் ஹரினி. இந்த சிறுமி நாகை வடகுடியிலுள்ள தனியார் சிபிஎஸ்சி பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வருகிறார்.. கொரோனா காரணமாக, தற்போது பள்ளி விடுமுறையில் ஆன்லைனில் வகுப்புகள் மற்றும் ஆன்லைனில் தேர்வுகளை நடத்துவதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இதையடுத்து, வரும் வாரத்தில் ஆன்லைன் தேர்வு தொடங்கப்பட உள்ள நிலையில், ஆன்லைன் மாதிரி தேர்வு பயிற்சி வகுப்புகளை பள்ளி நிர்வாகம் நேற்றிலிருந்து (ஜூலை 13) தொடங்கியுள்ளது.
இந்தநிலையில், கல்விக் கட்டணத்தை முழுமையாக செலுத்திய மாணவர்கள் மட்டுமே ஆன்லைன் தேர்வில் பங்கேற்க முடியும் என்ற செய்தியைப் பள்ளி நிர்வாகம் வாட்ஸ்அப் மூலம் அறிவித்துள்ளது. மேலும் எந்த வித அறிவிப்பும் இல்லாமல் ஆன்லைனில் தேர்வும் நடைபெற்றுள்ளது.
இதனால் ஆன்லைன் வகுப்பில் கலந்துகொள்ள முடியவில்லையே என்று ஹரினி மன விரக்தியில் வீட்டின் அறையில் புடவையைக்கொண்டு தூக்கு மாட்டி தற்கொலை செய்ய முயன்றுள்ளார். இதையடுத்து சிறுமியைக் காப்பாற்றிய உறவினர்கள், உடனடியாக நாகை அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்தச் சூழலில் நாகூரை அடுத்துள்ள நரிமணம் பகுதியில் செயல்படும் இந்தியன் ஆயில் எண்ணெய் நிறுவனத்தில், கடந்த 3 மாத காலமாக சம்பளம் கொடுக்காத காரணத்தால், பள்ளி கட்டணம் தன்னால் செலுத்த முடியவில்லை என்று ஹரினியின் தந்தை விஜயராஜ் மன வேதனையுடன் தெரிவித்தது கண்கலங்க வைக்கிறது.