கொரோனா வைரஸ் பரவல் காரணமாக முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்கள் அடைக்கப்பட்டன. பல தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கப்பட்டது. ஏறக்குறைய நான்கு மாதங்கள் ஆகியும், கொரோனாவின் தாக்கம் குறைந்தபாடில்லை. இதனால் மத்திய அரசு பல்வேறு வழிகாட்டலையும், நெறிமுறைகளையும் கல்வி நிலையங்களுக்கு வழங்கியது. அந்தவகையில் பல பள்ளி, கல்லூரிகள் மாணவர்களின் கல்வி சார்ந்த விஷயங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக தனியார் பள்ளிகள் இணையம் மூலமாக வகுப்புகளை தொடங்கி விட்டனர். தமிழகத்திலும் கூட தமிழக அரசு கல்வி தொலைக்காட்சி மூலமாக மாணவர்களின் கல்வியை ஊக்குவித்து வருகிறது. இதனிடையே மாணவர் நலனுக்காக ஏராளமான விஷயங்களையும் தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. குறிப்பாக கல்வி நிலையங்களில் மாணவர்களின் பெற்றோரிடம் கல்வி கட்டணத்தை கட்ட சொல்லி யாரும் கட்டாயப்படுத்தக்கூடாது என உத்தரவிட்டு இருந்தது.
அதோடு மட்டுமில்லாமல், பள்ளி படிக்கும் மாணவர்களுக்கான பாடப் புத்தகம் வழங்கப்படும் என்று ஏற்கனவே அரசு அறிவித்து இருந்தது, அந்த வகையில், தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு 15ஆம் தேதி முதல் பாட புத்தகம் வழங்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. மேலும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வரும்போது கட்டாயம் லேப்டாப் எடுத்து வரவேண்டும். வீடியோ பாடங்களும் வழங்கப்படும் என்பதால் மாணவர்கள் லேப்டாப் எடுத்து வர உத்தரவிடப்பட்டுள்ளது.