ஓசூர் அருகே காதலி இறந்த துக்கத்தில் காதலனும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் வெட்டுவனம் பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ். இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியை அடுத்த குமுதேபள்ளியில் தங்கி தனியார் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் வேலூரில் உள்ள லட்சுமி பிரியா என்னும் பெண்ணை நீண்ட வருடங்களாக காதலித்து வந்துள்ளார். இவர்களது காதல் விஷயம் பெண் வீட்டாருக்கு தெரியவர, அவர்கள் குடும்பத்துடன் சேர்ந்து பெண்ணை கண்டித்துள்ளனர். இதனால் விரக்தி அடைந்த பெண் மூன்று மாதங்களுக்கு முன்பு தற்கொலை செய்து இறந்து போனார். இதனால் மனவேதனையில் இருந்த விக்னேஷ் தனது காதலியை நினைத்து சோகத்தில் திரிந்து உள்ளார்.
இப்படியே நாட்கள் செல்ல நேற்று மிகுந்த மன உளைச்சல் அடைந்த விக்னேஷ் குமுதேபள்ளியில் அவர் தங்கியிருந்த வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பின் இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்க சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் விசாரணை மேற்கொள்கையில், தூக்கிட்டு கொள்ளும் முன், தனது செல்போனை எதிரே உள்ள செலாப்பில் காதலியின் முகம் தெரியுமாறு அவரது புகைப்படத்தை வைத்துக்கொண்டு அதனைப் பார்த்துக்கொண்டே தூக்கில் தொங்கியது தெரியவந்துள்ளது. காதலைத்தவிர ஒரு பாவமும் செய்யாத இளம்பெண்ணும், வாலிபரும் தற்கொலை செய்து கொண்டு இறந்த சம்பவம் தமிழக மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.