கரூர் அருகே காதலித்து திருமணம் செய்துகொண்ட மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டம் வெங்கமேடு பகுதியே அடுத்த அண்ணா காலனி தெருவில் வசித்து வந்தவர் மோகன். இவரது மனைவி சுகந்தி. இவர்கள் இருவரும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்துகொண்ட நிலையில், இவர்கள் இருவருக்கும் இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் கடந்த மூன்று வருடங்களாக மோகனுக்கும் சுகந்திக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு ஒரே வீட்டிற்குள் இருவரும் பேசாமல் இருந்து வந்துள்ளனர். மூன்று வருடங்களாக இருவருக்கும் இடையே பேச்சுவார்த்தை இல்லாததால் மோகன் மிகவும் மன விரக்தி அடைந்து சுகந்தியிடம் விவாகரத்து கேட்டுள்ளார்.
இதற்கு அவர் மறுக்கவே மிகுந்த மன உளைச்சல் அடைந்த மோகன் நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பின் இது குறித்து அறிந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக வெங்கமேடு காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்க சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் மோகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, தற்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.