பாலமேடு அருகே விற்பனைக்காக செல்ல இருந்த பசு மாடுடன் காளை மாடு பாசப்போராட்டம் நடத்திய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மதுரை பாலமேடு பகுதியில் வசித்து வருபவர் முனியாண்டி. இவர் பசு மாடு ஒன்றை நீண்ட வருடமாக வளர்த்து வருகிறார். இவரது வீட்டின் அருகே மஞ்சள் மலை கோவில் ஒன்று உள்ளது. இந்த கோவிலில் காலை ஒன்று பாரம்பரியமாக வளர்க்கப்பட்டு வருகிறது. இந்த காளையானது முனியாண்டி வீட்டின் வழியாக செல்லும்போது அவர் வளர்க்கும் பசு மாடு உடன் சேர்ந்து பழம், காய்கறிகள், தண்ணீர், அரிசி, புண்ணாக்கு உள்ளிட்ட உணவுப் பொருட்களை தின்பது வழக்கம். அப்போது பசுமாடுடன் காளை பாசமாக விளையாடுவதும் வழக்கம்.
இந்நிலையில் ஊரடங்கின் காரணமாக உணவுப் பொருட்களை வாங்க முடியாமல் மிகுந்த வறுமையில் தவித்தார் முனியாண்டி. இதையடுத்து தனது பசு மாட்டினை விற்கும் முடிவுக்கு அவர் வந்தார். எனவே சரக்கு ஆட்டோ ஒன்றை பிடித்து அதில் தனது பசுமாட்டை ஏற்றி விற்பதற்காக புறப்பட்டார் முனியாண்டி. இதைக்கண்ட காளைமாடு விரைவாக சரக்கு ஆட்டோவை நோக்கி ஓடிவந்து டிரைவரையும் பசுவின் உரிமையாளரையும் ஆட்டோவை இயக்க விடாமல் தடுத்து நிறுத்தியது. பிறகு அது நேசித்த பசுவிடம் ஏதோ கூற முயன்றது போல், முணுமுணுத்துக் கொண்டு நின்றது.
பசுவும் காளை மாட்டை பார்த்து முனுமுனுத்தது. இதற்கிடையில் பசுவின் உரிமையாளர் காளையை விரட்டுவதற்கு இடையில் வர அவரையும் முட்டி ஓரமாக தள்ளியது காளை. பிறகு ஒரு வழியாக காளையை திசை திருப்பி ஆட்டோவை ஸ்டார்ட் செய்து ஓட்டிச்செல்ல பசுமாடு செல்லும் வாகனத்தை பார்த்துக்கொண்டே கிட்டத்தட்ட ஒரு கிலோமீட்டர் தூரம் வரை ஓடிச் சென்று பின் மூச்சு வாங்கியதன் காரணமாக காளை நின்றது. இத்தனை நாட்களாக விளையாடிக் கொண்டிருந்த பசு மாட்டின் பிரிவை தாங்க முடியாமல் காளைமாடு நடத்திய பாசப்போராட்டம் அப்பகுதி மக்களே கண்கலங்க செய்தது.