மர்மமான முறையில் யானைகள் இறப்பதற்கு காரணமான தொற்று மனிதர்களைத் தாக்குமா என நிபுணர்கள் ஆராயத் தொடங்கியுள்ளனர்
தென் ஆப்பிரிக்க நாடான போட்ஸ்வானாவின் உள்ள ஒகவாங்கோ பகுதியில் சுமார் 280-க்கும் அதிகமான யானைகள் மர்மமான தொற்றுநோயால் மரணமடைந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் உயிரிழந்த யானைகளின் எண்ணிக்கை 400க்கு மேல் இருக்கும் என கூறப்படுகின்றது. மர்மமான தொற்று நோயினால் குழப்பத்துடன் இருந்த யானைகள் வட்டமாக சுற்றி திரிந்ததையும் மரணமடைவதற்கு முன் அவற்றின் முகங்கள் வாடி போனதையும் ஆராய்ச்சியாளர்கள் தெரிந்து கொண்டுள்ளனர். மேலும் வனவிலங்கு ஆய்வாளர்கள் குழு கொரோனா போன்று பெரும் தொற்றாக இருக்கக்கூடும் என்று அச்சம் கொள்கின்றனர்.
சுமார் 18 ஆயிரம் யானைகள் வசித்து வரும் போட்ஸ்வானாவின் 3000 சதுர மைல்களுக்கு மேற்பட்ட பகுதிகளில் இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இதில் கடினமான சூழல் என்பது யானைகளை தாக்கியிருக்கும் இந்த மர்ம தொற்று மனிதர்களையும் தாக்கலாம் என்பதை நிராகரிக்க முடியாது என நிபுணர்கள் கூறியுள்ளனர். மர்மமான முறையில் யானைகள் இறப்பது பொதுசுகாதார நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. நீர், தாவரங்கள், சடலத்தின் அனைத்து திசுக்களிலும் பரிசோதனை செய்ய வேண்டியது அவசியம். உயிரிழந்த யானைகளின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள் ஜிம்பாப்வேக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அங்கிருந்து வரும் முடிவுக்குப் பின்னர் யானைகளின் மரணம் குறித்த தகவலும் தெரிய வரும் என நம்பப்படுகிறது.