ஆந்திராவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் இறுதிச்சடங்கிற்கு ரூ15,000 நிவாரண தொகை வழங்க அம்மாநில முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
ஆந்திர மாநிலத்தின் முதலமைச்சரான ஜெகன்மோகன் ரெட்டி கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக ஊரடங்கு காலத்தில் தம் மக்கள் யாரும் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக பல நிவாரண தொகைகளையும் அவர் வழங்கி வருகிறார். இந்நிலையில் ஆந்திராவில் கொரோனா எண்ணிக்கை உயர்ந்து வரும் சூழ்நிலையில், நடவடிக்கை குறித்த மறுசீராய்வு கூட்டம் அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் நேற்று நடைபெற்றது.
கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முதல்வர், கொரோனா பாதிப்புகளை தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார். பின் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் இறுதி சடங்கிற்கு ரூபாய் 15,000 நிவாரணத் தொகையாக வழங்கலாம் என முடிவெடுக்கப்பட்ட நிலையில் உடனடியாக அதனை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். ஆந்திராவில் இதுவரை கொரோனாவால் 365 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் இறந்த பின் அவர் மூலமாக நோய் தொற்று பரவாது என்று தெரிவிக்கப்பட்ட பின்பும், பலர் கொரோனாவால் இறந்தவர்களை அடக்கம் செய்ய மறுத்து வரும் சம்பவங்கள் ஒரு அவலமாக தொடர்ந்து நடக்கிறது. அதேபோல் கொரோனாவால் இறந்தவர்கள் இரக்கமின்றி மனிதாபிமானமற்ற முறையில் இயந்திரங்கள் மூலமாக குழிக்குள் தள்ளப்படும் காட்சிகளையும் நாம் அவ்வப்போது பார்த்து வருகிறோம். இந்நிலையில் கொரோனாவால் இறந்தவர்களுக்காக இவர் அளிக்கும் இந்த நிவாரண தொகை திட்டத்திற்கு பொதுமக்கள் சார்பில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.