பசுவை பிரிந்த காளையின் பாசத்தை காணொளியை பார்த்து உணர்ந்த துணை முதல்வர் மகன் தனது முயற்சியால் இரண்டையும் சேர்த்து வைத்துள்ளார்.
மதுரை பாலமேட்டை சேர்ந்த விவசாயி முனியாண்டி என்பவரது பசு மாடும், மஞ்சமலை கோயிலில் உள்ள காளையும் ‘நட்புடன்’ பழகி வந்தன. ஒன்றாக தண்ணீர் குடிப்பது உணவருந்துவது என இருந்த நிலையில் விவசாயி தான் வளர்த்து வந்த பசுவை ஊரடங்கில் ஏற்பட்ட வறுமையினால் விற்க முடிவு செய்து 2 நாட்களுக்கு முன்பு சரக்கு வாகனத்தில் ஏற்றியுள்ளார்.
இதனை பார்த்த கோவில் காளை, வாகனத்தை வழிமறித்து இடையூறு செய்துள்ளது. பின்னர் அதை திசை திருப்பி வாகனத்தை எடுத்து சென்றனர். ஆனால் அந்த காளையோ சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் வரை வாகனத்தில் பின்னால் ஓடி வந்துள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வைரலானது.
இதனை பார்த்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் இரண்டாவைது மகன் ஜெயபிரதீப், அந்த பசுவை விலை கொடுத்து வாங்கி, கோயில் நிர்வாகத்தினரிடம் ஒப்படைத்து, பசுவையும் காளையையும் இணைத்து வைத்துள்ளார். இதனால் பிரிந்து சென்ற காளையும் பசுவும் இணைந்துள்ளன.