சென்னை கொடுங்கையூர் பகுதியை சேர்ந்தவர் செல்போன் மெக்கானிக் பிரகாஷ்.. 27 வயதுடைய இவருக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு தான் திருமணமாகி மனைவி கர்ப்பிணியாக உள்ளார். இந்தநிலையில் நேற்று இரவு இவர் கொருக்குப்பேட்டையில் இருந்து மணலி சாலை வழியாக கொடுங்கையூர் நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்தார்..
அப்போது அவ்வழியாக பருப்பு லோடு ஏற்றி கொண்டு சென்றுகொண்டிருந்த லாரியை பிரகாஷ் முந்திச்செல்ல முயன்றபோது எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி தவறி கீழே விழுந்துள்ளார். அப்போது அவருக்கு பின்னால் வந்த லாரி அவர் மீது ஏறி இறங்கியதில், பிரகாஷ் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வண்ணாரப்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் இளைஞரின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தப்பியோடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.