சென்னை பல்லாவரம் அடுத்துள்ள பம்மல் சரஸ்வதிபுரம் அருகே ரங்கா நகரிலுள்ள பார்க் ஒன்றில் நேற்று நள்ளிரவு 12 மணிக்கு இளைஞர்கள் சிலர் ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் என உற்சாகத்துடன் பட்டா கத்தியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியுள்ளனர்.
இதையடுத்து காவல் ஆணையர் அலுவலகத்திலிருந்து சங்கர் நகர் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. பின்னர் வீடியோவில் இருந்த நபர்களை சங்கர் நகர் போலீசார் தேடிவந்தனர்.
இந்தநிலையில், திருநீர்மலை பகுதியைச் சேர்ந்த அருண் (வயது 24)என்ற இளைஞர் பட்டா கத்தியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியது தெரியவந்ததையடுத்து, சங்கர் நகர் போலீசார் அருணை கைது செய்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
பின்னர் அவரிடம் நடத்தப்பட்ட விசாரனையில், பல ஆண்டுகளாகவே அருண் பட்டா கத்தியால் தான் கேக் வெட்டி பிறந்த நாளை வெகு சிறப்பாக கொண்டாடி வந்தது தெரியவந்தது. இவருடன் குரோம்பேட்டையைச் சேர்ந்த முகேஷ் ராஜன் (வயது 17), கார்த்திக் பாண்டியன் (வயது 25), பாபா என்கிற பொன்முடி (வயது 17), திருநீர்மலையைச் சேர்ந்த முத்துராமலிங்கம் (வயது 24), ராமமூர்த்தி (வயது 23), கோடீஸ்வரன் (வயது 20), நிரேஷ் குமார் (வயது 22) ஆகியோருடன் சேர்ந்து பட்டா கத்தியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியுள்ளனர்.
இதையடுத்து ஊரடங்கை மீறி பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் விதமாக பட்டா கத்தியால் கேக் வெட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்டதால் 8 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து நீதிபதி முன் ஆஜர்படுத்தி, புழல் சிறையிலடைத்தனர். சென்னையின் பல பகுதிகளிலும் பிறந்த நாள் கொண்டாட்டம் என்ற பெயரில் இளைஞர்கள் எல்லை மீறி நடக்கும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.